“நாங்க நிவாரணம் தரலைன்னு பேனர் வைக்கவா?” - அரசை புகழ்ந்து பேனர் ... ஆவேசமான விவசாயிகள் ஆட்சியருடன் கடும் வாக்குவாதம்...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளியை ஒட்டி ஒரு வார காலம் பெய்த கன மழை காரணமாக நடவு செய்யப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் பார்வையிடாததை கண்டித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில் 70 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 30 சதவீதம் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இதில், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முறையாக இயக்கம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதால், கொள்முதல் பணிகளிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களும், அண்மையில் நடவு செய்யப்பட்டுள்ள இளம் சம்பா பயிர்களையும் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் அரசிடம் நிவாரணம் கோரி வருகின்றனர்.
இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளியை ஒட்டி ஒரு வார காலம் பெய்த கன மழை காரணமாக நடவு செய்யப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. ஒருசில இடங்களில் பயிர்கள் நீரில் அழுகி சேதம் அடைந்தன. இந்தப் பயிர்களை அதிகாரிகள் பார்வையிடவில்லை, இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்திடம் விவசாயிகள் நடவு செய்யப்பட்ட அழுகிய இளம் நாற்றுகளுடன் வந்து மனு அளித்தனர்.
இதையும் படிங்க: நெல்மணிகளை காக்க தவறிய திமுக... நீங்க வீட்டுக்கு போறது உறுதி... தவெக தலைவர் விஜய் கண்டனம்...!
கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கெடுக்க வரவிலை என குற்றம்சாட்டினர். கடந்த 2024-25 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த பருவம் தப்பிய மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 63 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்த தமிழக அரசு இதுவரை அந்த பணத்தை கூட விடுவிக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்யாவிட்டால் இரண்டு நாட்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். தொடர்ந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
அதற்கு முன்னதாக டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அன்பழகன், “காப்பீடு முழுமையாக வழங்காமலேயே காப்பீடு வழங்கப்பட்டதாக தமிழக அரசுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிப்பது போல் ஆட்சியர் அலுவலக வாயிலில் பேனர் வைத்துள்ளீர்கள். ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கான 62 கோடி ரூபாய் நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறித்து பேனர் வைக்கலாமா?” என கேள்வி எழுப்பிய போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.
இதையும் படிங்க: பார்த்தாலே மனசு வலிக்குது... ஒரு மழைக்கே இந்த கதி..! சௌமியா அன்புமணி வேதனை...!