6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் குறித்த அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றம் அளிப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில், தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்த 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் குறித்த அறிவிப்பு இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற 642 புதிய துணை சுகாதார நிலையங்கள் திறப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி ஒன்றிய அரசிற்குப் பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டன. இந்த பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு வரும் என எதிர்பார்த்தோம்; ஆனால் ஒரு அறிவிப்பு கூட இல்லை எனச் சாடினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அதற்காகத் தமிழக அரசு நிலங்களைக் கண்டறிந்து தயார் நிலையில் இருந்தும், ஒன்றிய அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அதன் பயனை மக்களுக்கு வழங்காமல், பட்ஜெட்டில் விலைக் குறைப்பு குறித்துப் பேசாதது சாமானியர்களைப் பாதிக்கும் செயல் எனத் தெரிவித்தார். ஒன்றிய அரசு புறக்கணித்தாலும், தமிழக அரசு தனது சொந்த நிதியில் மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ரூ.359 கோடி மதிப்பீட்டில் 42 புதிய மருத்துவக் கட்டமைப்புகளைத் திறந்து வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: “அஜித் பவார் மறைவு: தேசமே கண்ணீர் அஞ்சலி!” - மராட்டியத் துணை முதல்வர் மறைவுக்கு தலைவர்கள் உருக்கமான இரங்கல்!
மாவட்டத் தலைமை மருத்துவமனைகள்: ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, ராஜபாளையம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட 7 இடங்களில் புதிய மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுத் திறப்பு விழாவிற்குத் தயார் நிலையில் உள்ளன. இன்று தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 642 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிராமப்புற மருத்துவச் சேவை மேம்படும் என உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட், "இந்த அநீதியை அனுமதிக்க முடியாது” - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!