×
 

மருத்துவக் கழிவுகள் கொட்டினால் குண்டாஸ்! அமலுக்கு வந்தது சட்டத்திருத்தம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று சட்ட திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 திருத்தப்படுவதற்கான மசோதா 2025 ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா, மருத்துவ கழிவுகளை முறையற்ற முறையில் கையாள்வோர் மற்றும் பொது இடங்களில் கொட்டுவோர் மீது விசாரணையின்றி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் முக்கியமான சட்டத்திருத்தம். 

ஏப்ரல் 26 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவது மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் கொட்டப்படும் கழிவுகளைத் தடுக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதா, ஏப்ரல் 29 அன்று விவாதிக்கப்பட்டு, ஏப்ரல் 30 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, ஜூன் 13 அன்று ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சட்ட திருத்தம் ஜூலை எட்டாம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982-இன் கீழ் விசாரணையின்றி கைது செய்யப்படுவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்தச் சட்டம், ஒருவர் குற்றம் செய்யும் முன்பே தடுப்புக் காவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது, இதனால் மருத்துவ கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்களை முன்கூட்டியே தடுக்க முடியும் எனக்கு கூறப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகளை முறையற்ற முறையில் கையாளுவது ஒரு நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மற்றும் திருநெல்வேலி போன்ற எல்லை மாவட்டங்களில், கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்படுவது தொடர்ந்து புகார்களுக்கு உள்ளாகியுள்ளது.

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைகளுக்கு தொட்டில் கூட இல்லை.. இதுதான் உலகம் போற்றும் மருத்துவமா? நயினார் கண்டனம்..!

இதனால், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்து வருகிறது.சென்னை உயர்நீதிமன்றமும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயமும் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாகக் கருதி, மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தன. இந்த உத்தரவுகளின் அடிப்படையில், தமிழக அரசு இந்த சட்டத்திருத்தத்தை முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அராஜக ஆட்சிக்கு அழிவு காலம் நெருங்கிடுச்சு! கொந்தளித்த நாயனார் நாகேந்திரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share