எல்லாமே OK... பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதுகாப்பு சான்று பெறும் சோதனைகள் நிறைவு!
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கான பாதுகாப்பு சான்றுகள் பெறுவதற்கான சோதனைகள் நிறைவு பெற்றன.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ இரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனைகள் நிறைவடைந்தன. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ இரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகளை நிறைவு செய்துள்ளது.
இந்தச் சோதனைகள் மெட்ரோ இரயில் பெட்டிகளுக்கான சான்றிதழைப் பெறுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி, இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 16, 2025 அன்று தொடங்கிய இந்த சோதனைகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்பட்டது. அத்துடன், வழித்தடத்தில் இரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்பட்டது.
மெட்ரோ இரயிலில் பயணிப்பது பயணிகளுக்கு எவ்வளவு வசதியானது என்பதை அறிய, மெட்ரோ இரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளத்தின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டது. மின்சாரம், காற்றழுத்தம் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நாளை 10 வார்டுகள்.. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் எங்கெங்கு நடக்கிறது தெரியுமா..??
இதில், பிரேக் அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த இரயில் கட்டுமானமும் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறதா என்பது சரிபார்க்கப்பட்டதாகவும் மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்கும் போது அதன் வடிவமைப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதும் சோதனைகள் நிரூபிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாகவே சோதனைகள் நிறைவடைந்துள்ளது என்றும் இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பாதுகாப்பு மற்றும் தர நிலைகளை பின்பற்றியுள்ளது என்பதை நிரூபிப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வரும் 26ம் தேதி.. முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழா.. பஞ்சாப் முதல்வருக்கு அழைப்பு..!!