×
 

இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

அரசு மருத்துவமனைகளில் ஓபி பதிவு செய்ய புதிய செயலி: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் (OP) பதிவு செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்கும் வகையில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை போன்ற நாட்களில் ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை போன்ற பெரிய அரசு மருத்துவமனைகளுக்கு தினமும் 2,000 முதல் 3,000 வரை வெளிநோயாளிகள் வருகின்றனர். அவர்கள் பதிவு செய்வதற்கே ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பலர் வெயிலிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் இருப்பதைப் போல, முன்கூட்டியே ஒரு செயலி மூலம் நேரம் ஒதுக்கீடு (Appointment) பெறும் வசதியை அரசு மருத்துவமனைகளிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். உதாரணமாக, காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை அல்லது 9.00 மணி முதல் 9.30 மணி வரை என ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியைத் தேர்வு செய்து பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.

இதையும் படிங்க: சாட்டையை எடுத்த தமிழக அரசு.. தொடங்கியது அதிரடி ஆக்‌ஷன்... மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

இதற்காக மருத்துவமனை பணியாளர்களை பயன்படுத்தப் போவதில்லை. அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்யும் வகையில் தனியாக ஒரு செயலி உருவாக்கப்படும். தற்போது தனியார் மருத்துவமனைகள் மற்றும் பெருநிறுவன மருத்துவமனைகளில் முன்பதிவு இல்லாமல் செல்வது அரிதாக உள்ளது. அதேபோன்ற வசதியை அரசு மருத்துவமனைகளிலும் கொண்டு வர வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்துள்ளோம்.

ரயில்வேயில் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை செயலி மூலம் பெறுவது போல, அரசு மருத்துவமனைகளுக்கான ஓபி பதிவையும் செயலி மூலம் மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இதன் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு, தொழில்நுட்ப நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, தேவையான வடிவமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என்றார்.

அரசு மருத்துவமனைகளில் ஓபி சீட்டு பெறுவதற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த புதிய செயலி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: அலட்சியம்..! அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்குவதா..? சீமான் காட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share