×
 

உங்க பண்ணையார் வாழ்க்கையை எல்லாம் விட்டுட்டு... திமுகவிற்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...!

30 நாட்களிலிலேயே ஏராளமான நிறுவனங்களை பார்த்து தொழில் முதலீடு ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

சிவகாசியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெக சார்பில் பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமினை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனக்கான  மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு  துவக்கி வைத்தார்.  

 அதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீர்த்தனா கூறியதாவது: தொழில்துறை வளர்ச்சிக்காக  தென்கொரியா நாட்டில் ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய மறு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற நிறுவனங்களில் முதலீடு ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட வுள்ளது.

 30 நாட்களிலிலேயே ஏராளமான நிறுவனங்களை பார்த்து தொழில் முதலீடு ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். தமிழகத்திற்கு வர வேண்டிய  தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டதாக  கூறுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கின்ற  வகையில் சட்டசபையில் உரிய பதிலளிக்க தயாராக உள்ளேன்.

இதையும் படிங்க: சீனாவுக்கு நிகராக சிவகாசி பட்டாசு ஏற்றுமதி வளரும்! அமைச்சர் கீர்த்தனா அதிரடி திட்டம்! மாஸ்டர் ப்ளான்!

எந்த நேரத்தில் தொழில் முதலீடு ஆந்திராவிற்கு சென்றது என்பதற்கான ஆதாரத்தை காண்பிக்கவும் தயாராக உள்ளேன். சட்டசபையில் யாராவது கேள்வி எழுப்புவார்கள் என நம்புகிறேன். தொழில்துறை முதலீட்டை  30 நாட்களில் யாராவது மன விருப்பத்திற்கு ஆந்திராவிற்கு செல்வார்களா? தொழில்துறை முதலீடு என்பது நீண்ட செயலாக்கம்.

முதலீட்டிற்கான  பல கட்ட செயலாக்கம் நடைபெறாமல் தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே தமிழகத்திலிருந்து வெளியே  சென்றுள்ளார்கள். தமிழகத்தை விட்டு முதலீட்டாளர்கள் எதற்காக, எப்பொழுது வெளியே சென்றார்கள் என்பது குறித்தான அனைத்து விவரங்களுடன் கூடிய ஆதரங்கள் என்னிடம் உள்ளது.

அதற்கான ஆதாரங்களை தகுந்த மேடையில்தான் சொல்ல முடியும். சட்டசபையில் கேட்கச் சொல்லுங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன். முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தன்னை இன்னமும்  தொழில் துறை அமைச்சராகவே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தயவு செய்து டி.ஆர்.பி.ராஜா மாற்றத்தை  ஏற்றுக்கொள்ள வேண்டும்.அவர் வேண்டாம் என்று சொல்லிதான் மக்கள் முடிவெடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

உங்களது பண்ணையார் வாழ்க்கையை  எல்லாம் விட்டுவிட்டு தயவு செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான எங்களுக்கும்,  மக்களுக்குமான மரியாதையைக் கொடுங்கள். மக்களை அவமதிக்கும் செயலை இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள். கடன் இல்லாமல் எந்தவொரு வீடும் கிடையாது.

அதேபோல் மாநில அரசும் கடன் வாங்கி நல்ல விஷயத்திற்காக அதை பயன்படுத்தி இருந்தால் நல்லது. அது எந்த விஷயத்திற்காக பயன்படுத்தப்பட்டது, அதனால் மக்கள்  பயனடைந்தார்களா? என்பது தான் கேள்வி.  கோவிட் காலத்தை காரணம் காட்டி  நிதி நிலைமையைக்  குறை சொல்வது ஏற்புடையதல்ல. கோவிட் காலத்தில் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களும் பாதிக்கப்பட்டது. ஆனால் அந்த மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் குறையவில்லை. 

நிதிநிலை குறித்தும் என்னிடம் உள்ள ஆதாரங்களைக் கேட்டாலும் தரத் தயாராக உள்ளேன். தமிழகத்தில் இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொருவரும் 1 லட்சம் ரூபாய் வரை கடன் சுமக்கும் நிலையில் இருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஆட்சிக்கு வந்துள்ள எங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் கீழ்த்தனமான  குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அனைத்தும் உங்களுக்கு தான் கேடாக அமையும். 

5- ஆண்டுகள் மக்களை ஏமாற்றியதால்தான் மக்கள் உங்களை தூக்கிப் போட்டு மாற்றம் என எங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.  அதை மதிக்காமல் எங்களையும், மக்களையும்  இழிவுபடுத்தும் வகையில் தற்குறி என பேசுகிறீர்கள்.

இது எந்த வகையில் நியாயம்?, முன்னாள் ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதையும் மீறி ஊழல் இல்லாத ஆட்சியை முதல்வர் விஜய் கொடுத்துள்ளார். ஊழல் இல்லாத ஆட்சி நடந்து வருகிறது. இதுதான் ஒரு பெரிய மாற்றம். இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் கல்யாண வீடாகச் சென்று கத்திக் கொண்டே இருங்கள். 

70- ஆண்டுகளாக ஆண்ட கட்சிகளால் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தவெக ஆட்சியில் சாமானியர் கூட எம்எல்ஏ ஆகலாம். ஜாதி, மதம் எதையும் பார்க்காமல் மக்களுக்கு பொது சேவை செய்யும் எண்ணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ ஆகலாம் என்ற நிலைமையை தமிழகத்திற்குக் கொண்டு வந்தவர் முதல்வர் விஜய் என்றார்.
 

இதையும் படிங்க: மூதாட்டிக்கும் பாதுகாப்பில்ல.. மனசு பதைபதைக்குது... நயினார் ஆதங்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share