#BREAKING: அமைச்சர் ஐ.பெரியசாமி சொத்து ஆவணங்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி!
அமைச்சர் ஐ பெரியசாமியின் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி மற்றும் அவரது மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆகஸ்ட் 16 அன்று காலை தொடங்கிய இந்தச் சோதனைகள், சென்னை, திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட பல இடங்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தன.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.சென்னையில், பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள பெரியசாமியின் ரோஜா இல்லம் முகாம் அலுவலகத்தில் காலை 7:30 மணிக்கு சோதனைகள் தொடங்கின. அதேநேரம், திண்டுக்கல் மாவட்டத்தில் கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள அவரது வீடு, மகள் இந்திராவின் வள்ளலார் நகர் மற்றும் சிவாஜி நகர் வீடுகள், செந்தில்குமாரின் சீலப்பாடி இல்லம் ஆகியவற்றிலும் சோதனைகள் நடைபெற்றன.
பெரியசாமியின் இளைய மகன் பிரபுவிற்கு சொந்தமான திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் உள்ள இரு நூற்பாலைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில், பெரியசாமி மற்றும் செந்தில்குமாரின் அறைகளிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு! சிக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி... உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்..!
இது தொடர்பாக அமலாக்கத்துறை கொடுத்த தகவல் படி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி தொகுதி எம்.எல்.ஏ., அவரது மகன் ஐ.பி. செந்தில் குமார் மற்றும் பிறருடன் தொடர்புடைய, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மற்றும் சென்னையில் உள்ள பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக, 2002 ஆம் ஆண்டு PMLA இன் கீழ், சென்னை ED துறை கடந்த 16ஆம் தேதி சோதனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. சோதனைகளின் போது, சொத்துக்கள்,முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாடா? மனுஷங்களா? குறை ஊதியம்.. 12 மணி நேர வேலை! போராட்டத்தில் குதித்த மதுரை தூய்மை பணியாளர்கள்..!