காது கேட்கல… நான் சரக்கு அடிக்கிறது இல்ல! அமைச்சர் சேகர்பாபு பதிலால் சர்ச்சை
தூய்மை பணியாளர்கள் குறித்த கேள்வியின் போது காது கேட்கவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் ராயபுரம் (மண்டலம் 5) மற்றும் திரு.வி.க. நகர் (மண்டலம் 6) பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. இந்த தனியார்மயமாக்கல் முடிவு, தூய்மைப் பணியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 1 முதல் சுமார் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் 13 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், திரைப்பட பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்தப் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல என்றும், போராட்டக்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆகஸ்ட் 13 அன்று நள்ளிரவில், சுமார் 800 முதல் 900 தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின்போது, சில பெண் பணியாளர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் 12 மண்டபங்களில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டங்களைத் தொடங்கினர். செப்டம்பர் 8 அன்று, கொருக்குப்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நள்ளிரவு 1:30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், ரிப்பன் மாளிகையின் பின்புறம் 13 தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டம், உயர்நீதிமன்ற உத்தரவின்படி குறைந்தபட்ச ஊதிய நிர்ணயச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்டது. ஆனால், இந்தப் போராட்டத்திலும் காவல்துறை தலையிட்டு, 13 பணியாளர்களை கைது செய்தது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுபிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: நாங்க என்ன கஞ்சா, சாராயம் விக்குறவங்களா? கொளுத்தினு சாவோம்! தூய்மை பணியாளர்கள் ஆவேசம்..!
அப்போது காதில் கை வைத்துக் கொண்டு காது கேட்கவில்லை என்றும் தூய்மை பணியாளர்கள் பற்றி கேட்டால் பேசவே மாட்டோம்., வேஸ்ட் என்று கூறியுள்ளார். தொடர்ந்து ராயபுரம் பேருந்து நிலையத்தில் மது அருந்துவதாக வெளியான தகவல்கள் குறித்து கேட்டபோது நாங்கள் மது அருந்துவதில்லை என்றும் நான் சரக்கு அடிப்பதில்லை எனவும் அமைச்சர் சேகர்பாபு பேசி இருக்கிறார். செய்தியாளர்களின் கேள்விக்கு ஒரு அமைச்சர் இது போலவா பதிலளிப்பார் என்று விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறாங்க…தூய்மை பணியாளர்களுடன் நடந்த 7வது கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!