ELECTION தான் TARGET! "ஓய்வு" என்பதையே மறந்து விடுங்கள்... திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை!
ஓய்வு என்ற வார்த்தையையே மறந்துவிட வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன. கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த முயற்சிகளின் முக்கிய பகுதியாக, அவர் திமுக நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதனிடையே, தமிழ்நாட்டு மக்களை ஒரு பொது இலக்கை நோக்கி ஒன்றிணைத்து, மாநிலத்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாக உத்தியைக் குறிக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்தி வரும் ஆலோசனைகள் இந்த “ஓரணியில் தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன.
திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திமுக முப்பெரும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒன்றை சொல்ல விரும்புவதாகவும், ஓய்வு என்ற வார்த்தையே மறந்து விடுங்கள் என்றும் தெரிவித்தார். ஏனென்றால் 2026 இல் நாம் பெறப்போகும் வெற்றி என்பது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான வெற்றி மட்டுமல்ல என்றும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கான வெற்றி எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சும்மா உருட்டக்கூடாது! முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி இபிஎஸ் சரமாரி கேள்வி...
செப்டம்பர் 20 ஆம் நாள், ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை கழக மாவட்டங்கள் வாரியாக நடத்த வேண்டும் என்றும் நமது அரசின் திட்டங்களால், மக்களிடையே நமக்கு இருக்கும் ஆதரவு உணர்வை அப்படியே தேர்தல் வரைக்கும் எடுத்துச் சென்று அறுவடை செய்ய ஒவ்வொருவரும் களத்தில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே நமது ஒற்றை இலக்கு என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ஸ்டாலினே ஸ்டன்னாகிடனும்...” - கரூர் உடன்பிறப்புகளுக்கு செந்தில் பாலாஜி பிறப்பித்த கட்டளை...!