ஆக. 7ல் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி... கழக உடன்பிறப்புகளுக்கு முதல்வர் அழைப்பு!
கலைஞரின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழே உயிராக, தமிழர் வாழ்வே மூச்சாக, தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு தமிழினத் தலைவராக மக்கள் மனங்களில் நிறைந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்து 7 ஆண்டுகளானாலும் வாரத்தின் 7 நாட்களும் தலைவர் கலைஞரின் நினைவுகளுடன்தான் கழக உடன்பிறப்புகளின் பொழுது விடிகிறது என்றும் எந்நாளும் நம்மை இயக்கும் ஆற்றலாகத் திகழ்பவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டின் நலன் காக்கும் திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் கலைஞர் முன்னெடுத்த மாநில சுயாட்சி முழக்கத்தின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களின் நலன்களையும் காக்கச் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதிய ஆணவப் படுகொலை! வாக்கரசியலுக்காக அம்போனு விடுவீங்களா?சீமான் ஆவேசம்
கலைஞரின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் அமைதிப் பேரணியில் உடன்பிறப்புகள் கடலெனத் திரண்டு வணக்கத்தைச் செலுத்துவோம் என்றும் மாவட்டங்கள்தோறும், கிளைகள்தோறும் தலைவர் கலைஞரின் நினைவு போற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.
நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான் என்றும் தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருவதாக கூறினார்.
உண்மையான அ.தி.மு.க தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், டெல்லி வரை சென்று மண்டியிட்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் பழனிசாமி என்றும் சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்+தேமுதிக - திமுக கூட்டணியில் இணைகிறதா புதிய கட்சிகள்? - நெத்தியடி பதிலடி கொடுத்த துரைமுருகன்...!