சாதிய ஆணவப் படுகொலை! வாக்கரசியலுக்காக அம்போனு விடுவீங்களா?சீமான் ஆவேசம்
சாதியரீதியிலான வாக்கரசியலை மனதிற்கொண்டு, சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டமியற்ற மறுப்பது தான் உங்கள் சனாதன ஒழிப்பா என சீமான் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களது சாதிய ஆணவப்படுகொலை வழக்கில் ஆளும் திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கு மிக மோசமான நிர்வாகச் செயல்பாடு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தனது மகனின் படுகொலைக்கு நீதிகேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து கவினின் பெற்றோர் ஐந்து நாட்களுக்கு மேலாக அறப்போராட்டம் நடத்துமளவுக்கு அவர்களைத் தள்ளியது பெரும் வேதனைக்குரியது என்றும் ஆறுதல் சொல்லித் தேற்ற, அவர்களது வீட்டுக்குச் சென்றபோது கவினின் தாயார் கண்ணீர் வடித்து, கதறியது மனதைக் கலங்கச் செய்தது எனவும் பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு பரிதவித்த அந்தத் தாயின் கண்ணீரைக் கண்டு, எதுவும் செய்யவியலாத கையறு நிலையில் கூனிக் குறுகி நின்றதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் பேசிய இப்படுகொலை குறித்து தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதுவரை வாய்திறக்காததும், அலட்சியமாக நடவடிக்கைகளை இவ்வழக்கில் மேற்கொண்டதும் கடும் கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்த சீமான், சனாதன ஒழிப்பு, சாதிய எதிர்ப்பு, சமூக நீதி, சமத்துவம் என்றெல்லாம் நாளும் பேசி, விளம்பர அரசியல் செய்து வாய்ப்பந்தல் போடும் திமுக அரசு, சாதியத்திற்கு ஆதரவாக மறைமுகமாகத் துணைநிற்பது வெட்கக்கேடானது என்று சாடினார்.
இதையும் படிங்க: ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் ஒப்படைப்பு... மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு!
21ஆம் நூற்றாண்டிலும் நடந்தேறும் இத்தகையப் படுகொலைகளும், கொடூரங்களும் நாகரீகச்சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா எனும் கேள்வியையும், குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துவதாகவும் சாதிய ஆணவப்படுகொலைகள் நடைபெறாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்கச் செய்யவும் இச்சமயத்திலாவது தனிச்சட்டம் இயற்ற வேண்டியது பேரவசியமாகிறது எனவும் கூறினார்.
ஆளும் திமுக இனியாவது சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். மாறாக, அதனைச் செய்ய மறுக்கும்பட்சத்தில், பெரியார் எனும் போலிப் பிம்பத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நீங்கள் போடும் சாதி ஒழிப்பு நாடகமும், உங்களது முற்போக்கு முகமூடியும் கிழிந்து தொங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: கவினும் நானும் உயிருக்கு உயிரா காதலிச்சோம்! சுபாஷினியின் பரபரப்பு வீடியோ...