23 கோடியில் சுரங்கத்துறை அலுவலகம்... தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்த முதல்வர்...!
கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் பல பகுதிகள் பல்வேறு கனிம வளங்களைக் கொண்டுள்ளன. இக்கனிம வளங்கள் மாநிலத்தின் விரைவான தொழில் மயமாக்கலுக்கு வழிவகை செய்கின்றன. கனிம வளத்துறையானது தொழில் வளர்ச்சிக்கேற்ப அதிகரித்து வரும் கனிமத் தேவைகளை பூர்த்தி செய்தும், தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்குக் கனிமங்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் வழங்கப்படுவதை உறுதி செய்தும் வருகிறது.
புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகமானது சென்னை, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான கட்டடத்தில் போதுமான இடவசதியின்றி இயங்கிவருகிறது. எனவே இத்துறையின் பணியாளர்கள் மற்றும் நிர்வாக நலனை கருத்தில் கொண்டு, அதே இடத்தில் 40,528 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 23.10 கோடி ரூபாய் செலவில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டன.
இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில் சென்னை, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 40,528 சதுர அடி கட்டடப் பரப்பளவில் 23.10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகக் கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: இனி ஒழுகும் வீட்டின் கவலை வேண்டாம்... பிரேமாவிற்கு வீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு...!
இவ்வலுவலகக் கட்டடத்தின் தரைத் தளத்தில் பார்வையாளர்களுக்கான அறை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் ஓட்டுநர் ஓய்வறையும், முதல் தளத்தில் இயக்குநர் அறை, கூடுதல் இயக்குநர் அறைகள், இணை இயக்குநர் அறைகள் மற்றும் பார்வையாளர்களுக்கான அறைகளும், இரண்டாம் தளத்தில் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், நேர்முக உதவியாளர் மற்றும் மேலாளர் அறைகளும், மூன்றாம் தளத்தில் கணக்குப் பிரிவு, தணிக்கைப் பிரிவு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, சட்ட அதிகாரி அறை, அலுவலக கோப்புகளை பராமரிக்கும் இரண்டு காப்பக அறைகள் ஆகியவையும், நான்காவது தளத்தில் மாவட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டரங்கு மற்றும் சுரங்க குத்தகை கோப்புகளை கையாளும் சுரங்கப் பிரிவு, ஆய்வுக்கூடம். நூலகம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குடிநீர் வசதி, மின்தூக்கி மற்றும் தீ தடுப்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நல்லா நடத்துனிங்க நிகழ்ச்சி... அம்புட்டும் விளம்பரம்... சீமான் சரமாரி விளாசல்...!