"சமூக நீதி விடுதிகள்"..! அடுத்தடுத்து மாஸ் அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்..!
பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் மாணவர் விடுதிகளை நிர்வகித்து வருகிறது. இவை ஏழை மாணவர்களுக்கு கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உறுதுணையாக உள்ளன. சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகம் போன்றவை, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு மாணவர்களுக்கு உதவி வருகின்றன.
இந்த நிலையில், ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல்வேறு துறைகளின் கீழ் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு, தமிழக அரசின் சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்... வெத்து விளம்பரம் இப்ப தேவையா? ஸ்டாலினை வசைப்பாடிய இபிஎஸ்
தமிழ்நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் எனவும் பெரும் தலைவர்களின் பெயரில் இயங்கி வரும் விடுதிகள், அந்தத் தலைவர்களின் பெயருடன் சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும் எனவும் கூறினார். உதாரணமாக, ‘எம்.சி.இராஜா சமூகநீதி விடுதி என இவ்வாறு பெயர் மாற்றம் அமைய உள்ளது. சமூகநீதி மற்றும் சமத்துவத்தை மையப்படுத்திய தமிழ்நாடு அரசின் கொள்கைகளை வலியுறுத்துவதற்காகவும், ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான கல்விச் சூழலை உருவாக்குவது இதன் முதன்மை நோக்கம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், சமூகநீதி என்பது எங்களது ஆட்சியின் மைய அம்சம் என்றும் இந்த விடுதிகள் மூலம் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியும், வாழ்க்கை மேம்பாடும் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். விடுதிகளுக்கான சலுகைகள், உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும் என்றும் இளம் சந்ததியினர் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை, சமத்துவச் சமுதாயமாகக் கட்டமைத்திட இந்த முயற்சிகள் அடித்தளம் அமைக்கும் என கூறிய அவர், சமூகநீதி, சமநீதி, சட்ட நீதி ஆகியவை அனைவருக்கும் பொது என்ற நிலையை உருவாக்க திராவிட மாடல் அரசு தொடர்ந்து பங்காற்றும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: பெத்த தாய்க்கு தான் வலி தெரியும்.. கவலை படாதீங்க அம்மா.. அஜித் தாயாருக்கு எடப்பாடி ஆறுதல்!