#ATS: ரொம்ப பெருமையா இருக்கு.. உள்நாட்டு பாதுகாப்பில் தமிழக காவல்துறை முன்னணி.. முதல்வர் பெருமிதம்..!
உள்நாட்டு பாதுகாப்பில் தமிழக காவல்துறை முன்னணியில் இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது 2023 நவம்பர் 21 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை மூலம். இந்தப் பிரிவு மாநிலத்தில் தேச விரோத சக்திகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து, தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தீவிரவாதச் செயல்களைத் தடுத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க உதவுதல், தேச விரோத சக்திகளின் தகவல்களைச் சேகரித்து, மாஃபியாக்கள், குண்டர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல், போலி ரூபாய் நோட்டுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தலைத் தடுத்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூலை 1 அன்று, ஆந்திர மாநிலத்தின் அன்னமய்யா மாவட்டத்தில், 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் மற்றும் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஆகிய இரு இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதிகளை தமிழக தீவிரவாத எதிர்ப்பு படை கைது செய்தது. இவர்கள் தடைசெய்யப்பட்ட அல்-உம்மா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
1995-ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு.,1995-ல் நாகூரில் நடந்த தங்கம் முத்துக்கிருஷ்ணன் கொலை வழக்கு., 1999-ல் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காவல் நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குண்டுவெடிப்பு., 2011-ல் மதுரையில் முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையின் போது குழாய் குண்டு வைக்க முயற்சி.,2012-ல் வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை.,2013-ல் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இவர்கள் காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், 30 ஆண்டுகளாக படாமல் இருந்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பிடித்தனர். அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரவாத எதிர்ப்பணிகளில் தனி கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவு பிரிவின் கீழ் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாடுகாவல்துறை, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல்துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை, அண்மையில் நமது ATS படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலக் காவல்துறையினருக்கும் நன்றி கூறினார்.
இதையும் படிங்க: அஜித் மரண வடு மறைவதற்குள் மற்றொரு பகீர் சம்பவம்! இன்னும் எத்தனை சட்ட மீறல்கள்.. அண்ணாமலை கொந்தளிப்பு..!
இதையும் படிங்க: இது ஒன்னும் உங்க அப்பன் வீட்டு காசு இல்ல.. மக்களோட பணம்.. சீறிய விஜய்..!