×
 

இது ஒன்னும் உங்க அப்பன் வீட்டு காசு இல்ல.. மக்களோட பணம்.. சீறிய விஜய்..!

அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் குற்றம்சாட்டியுளளார். மேலும் எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும், திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த தவெக தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மீன்பிடி தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருடன் பயன்படுத்தி வந்துள்ளனர். கட்சியின் பெயரை எழுதியிருந்ததால் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மானியத்தை வழங்க முடியாது என்று, அரசாங்க ஊழியர்கள் படகுகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது போன்ற எதேச்சதிகார அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என்று ஆவேசமாக பேசியுள்ளார் விஜய். 

அதுமட்டுமின்றி ஏற்கெனவே மீனவப் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அப்படிச் செல்லும் அவர்கள் இலங்கை அரச பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கைது மற்றும் படகுகள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகிறது. மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு முழு அளவில் பக்க பலமாக இருக்க வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமை. ஆனால் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிய, கச்சத்தீவை மீட்பது அல்லது அதைக் குத்தகைக்கு எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் உள்பட, பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார். 

இதையும் படிங்க: அதிமுக கிடையாது! பாஜக தான் மெயின் டார்கெட்! இது ஸ்டாலின் பார்முலா! சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!

இந்த சூழலில் மீனவ மக்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வாழ்ந்தும் அரசால் புறக்கணிக்கப்படுகின்றனர். மாநில அரசு அவர்களை ஏதோ அவர்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல எதேச்சதிகார அரச பயங்கரவாதத்தோடு நடத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறிய விஜய், மீனவர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதியிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் படகுகளில் எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவர்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுகவின் கொடியையோ பயன்படுத்துபவர்களிடம் இவ்வாறு கூறுமா? என்றும் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல, பொதுமக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் என்பது முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதைத் திமுக தனது சொந்தப் பணத்தை எடுத்து மீனவர்களுக்கு வழங்குவது போல நினைத்துக்கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். 

எனவே தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும், இல்லையென்றால் தவெக  சார்பில் மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். 

இதையும் படிங்க: இனி இதுபோல நடக்காதுன்னு உத்தரவாதம் கொடுங்க முதல்வரே.. கொந்தளித்த தவெக விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share