திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற தினம் இன்று..! குவியும் கழக உடன்பிறப்புகளின் வாழ்த்துகள்..!
திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற தினம் இன்று. அவருக்கு கழக உடன்பிறப்புகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
மு.க. ஸ்டாலின், மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதியரின் மூன்றாவது மகனாக 1953 மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் பிறந்தார். சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் மறைவுக்கு சில நாட்களுக்கு முன் பிறந்ததால், அவரது நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டப்பட்டது. மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் படித்த ஸ்டாலின், தனது இளவயதிலேயே அரசியலில் ஈடுபாடு காட்டினார்.
1970-களில், அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்ற அவர், திமுகவின் இளைஞர் அணியை உருவாக்கி, கட்சியின் இளம் தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.1980-இல் மதுரையில் நடந்த திமுக மாநாட்டில், கருணாநிதியால் இளைஞர் அணி உருவாக்கப்பட்டபோது, ஸ்டாலின் அதன் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2003-இல் துணைப் பொதுச் செயலாளராகவும், 2008-இல் கட்சியின் பொருளாளராகவும் பதவி உயர்ந்தார்.
1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37-ஆவது மேயராகப் பணியாற்றிய ஸ்டாலின், 2006 முதல் 2011 வரை உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், 2009 முதல் 2011 வரை துணை முதலமைச்சராகவும் பணியாற்றினார். 1984 முதல் 2016 வரை எட்டு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, ஆறு முறை வெற்றி பெற்றவர். கொளத்தூர் தொகுதியில் 2011 மற்றும் 2016 தேர்தல்களில் வெற்றி பெற்று, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
கருணாநிதியின் மறைவு, திமுகவிற்கு மட்டுமல்லாமல், தமிழக அரசியலுக்கே ஒரு பெரும் இழப்பாக இருந்தது. 1969 முதல் 2018 வரை சுமார் 49 ஆண்டுகள் கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி, திமுகவை ஒரு வலுவான பிராந்திய அரசியல் சக்தியாக உருவாக்கியவர். அவரது மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைப் பொறுப்பு மு.க. ஸ்டாலினுக்கு மாறியது. இது கட்சியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா ரூ.10 லட்சம்! இறந்து போன அரசு மருத்துவர் கண்ணுக்கு தெரியலையா? விளாசிய சீமான்..!
தற்போது ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகவும் திமுக தலைவராகவும் வெற்றிகரமாக தனது பணியை திறம்பட ஆற்றி வருகிறார். திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவிற்கு மரண அடி... பீகார் மண்ணில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை...!