கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா ரூ.10 லட்சம்! இறந்து போன அரசு மருத்துவர் கண்ணுக்கு தெரியலையா? விளாசிய சீமான்..!
அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி வந்த பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் மணிக்குமார் கடந்த 18ஆம் தேதி காலை பணியின் போது மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஒன்று மோதி உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாகவும், மணிக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவிப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இதே விபத்தில் சிக்குண்டு படுகாயத்துடன் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவுடன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பிரவீன் விரைந்து நலம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.
சாலையில் நடந்து சென்றது குற்றமா என்றும் தரமற்ற பழுதடைந்த அரசுப் பேருந்துகளை சாலையில் பயணிக்க விட்டு, மக்களின் உயிர்களைப் பறிக்கும் அரசின் குற்றமா எனவும் கேள்வி எழுப்பிய சீமான், அரசின் அனைத்து துறைகளிலும் மலிந்துபோயுள்ள ஊழலால் அரசு நிர்வாகம் முற்று முழுதாகச் சீர்கெட்டு நிகழும் இதுபோன்ற விபத்துகளுக்குக் கூட தார்மீகப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய துயர்துடைப்பு உதவிகள் வழங்க மறுக்கும் திமுக அரசின் செயல் கொடுங்கோன்மையின் உச்சம் என கூறினார்.
மதுபோதை மீதான வெறியில் சட்டத்திற்குப் புறம்பாகக் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு தொகையாக மக்கள் வரிப்பணத்தில் இருந்து ரூபாய் 10 இலட்சத்தை அள்ளித் தந்து, அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்கும் இந்த திராவிட மாடல் திமுக அரசு, மக்களின் உயிர்க் காக்கும் உன்னதப் பணியாற்றும் மருத்துவர்கள், அரசின் அலட்சியத்தால் நிகழும் விபத்துகளில் சிக்குண்டு உயிரிழந்தால் கூட அவர்களின் குடும்பத்திற்கு எவ்வித துயர்துடைப்பு உதவிகளையும் வழங்க மறுப்பது வெட்கக்கேடு என்றும் சாடினார்.
இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா? மனம் திறந்த சீமான்..!
அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையை நலம் காக்கும் ஸ்டாலின் என்று அரசியல் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், அரசு மருத்துவர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எப்போது எனவும் இனியும் காலம் கடத்தாமல் சமீப நாட்களின் நிகழ்ந்த விபத்துக்களால் உயிரிழந்த, மூன்று அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கும் இரண்டு கோடி ரூபாய் வீதம் துயர்துடைப்புத் தொகை வழங்க வேண்டும் எனவும், அவர்களது குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், படுகாயமடைந்த மருத்துவர் பிரவீனுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: சீமான் சொல்றது 100/100 உண்மை.. விஜய் பற்றிய விமர்சனத்தை ஆதரித்த பிரேமலதா விஜயகாந்த்!