ரூ. 3 கோடியில் தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்பிப்பு..!
பரமக்குடியில் உருவாக்கப்பட்ட இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இமானுவேல் சேகரனார் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் செல்லூர் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை வேதநாயகம் ஒரு பள்ளி ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். இளம் வயதிலிருந்தே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர், 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
ஆனால் அவரது போராட்டம் வெறும் ஆங்கிலேய எதிர்ப்புடன் நின்றுவிடவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளுக்காகவும், கல்வி உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். குறிப்பாக கிறிஸ்தவ நிறுவனங்களின் பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்களின்போது "ஒடுக்கப்பட்ட சமூகத்து குழந்தைகளே, பள்ளிகளை நோக்கி புறப்படுங்கள்" என்று பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம் பகுதிகளில் பரப்புரை செய்து மக்களை தட்டியெழுப்பினார்.
இத்தகைய ஒரு தியாகியின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி, ரூ.3 கோடி மதிப்பீட்டில் பரமக்குடியில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை… மாஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..! செம்ம குஷி..!
அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. அதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இம்மானுவேல் சேகரன் முழு உருவச் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் மணிமண்டபத்தையும் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் இமானுவேல் சேகரனாரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.! களைகட்டிய நிகழ்ச்சி..! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!