பத்து வருஷ போராட்டம்... செவிசாய்க்காத திமுக அரசு.. மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க சீமான் வலியுறுத்தல்..!
மீன்பிடி தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற சீமான் வலியுறுத்தினார்.
நெல்லை மாவட்டம் தோமையார்புரத்தில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவமக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அக்கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.
இராதாபுரம் அடுத்துள்ள தோமையார்புரம் கடற்கரை கிராமத்தில் ஏறத்தாழ 160க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருவதாகவும் முறையான தூண்டில் வளைவு இல்லாத காரணத்தால் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் மீனவர்களின் மீன்பிடி படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவை கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும் அவலநிலை ஏற்படுகிறது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு சுவர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுகள் காரணமாக தோமையார்புரத்தில் கடல் அரிப்பு அதிகமாகிறது என்று சுட்டிக்காட்டி உள்ள அவர் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தோமையார்புரத்தில் மீன் பிடி தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை அப்பகுதி மக்கள் மேற்கொண்டதாகவும் ஆனால் திமுக அரசு செவி சாய்க்க முன் வராதது அப்பகுதி மக்களை வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: வாரிசுகளுக்கே முதல்வர் பதவி? இதுவா குடியரசு? பணநாயகம் மறைந்து ஜனநாயகம் வெல்ல சீமான் வாழ்த்து..!
மீனவ மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் திமுக அரசிற்கு இத்தனை அலட்சியம் ஏன் என்றும் இதுதான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திராவிட மாடலா எனவும் எளிய மக்களை ஏமாற்றுவதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தாய்மொழி வழி கல்வியை சிதைத்த திராவிட மாடல் அரசு...! சீமான் கடும் கண்டனம்..!