×
 

இதல்லவா விசுவாசம்..!! என் மகனுக்கு TVK-னு தான் பேரு வெப்பேன்..!! தவெக எம்.எல்.ஏ சுவாரசிய தகவல்..!!

தன்னுடைய மகனுக்கு TVK என பெயர் சூட்ட இருப்பதாக தவெக எம்.எல்.ஏ பல்லவி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்ட எம்.ஆர். பல்லவி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார். தேர்தல் களத்தில் மட்டுமல்லாமல், தனது விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாகவும் அவர் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளார்.

36 வயதான பல்லவி, 12-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்த அவரது பணியை பாராட்டிய கட்சி தலைமையகம், அவருக்கு திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது.

தேர்தல் பிரசார காலத்தில் பல்லவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உடல்நல சவால்களை பொருட்படுத்தாமல், தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கோரினார். பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி தனது கட்சியின் கொள்கைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்தார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகமான தேர்தல் பணிகள் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமா? நிர்பந்தமா? வைகோ, துரை வைகோ பேச்சால் திமுக அப்செட்!

வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.எஸ். ராமச்சந்திரனை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து பல்லவி வெற்றி பெற்றார். இந்த வெற்றி, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில், தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே பல்லவி ஆண் குழந்தைக்கு தாயானார். அரசியல் பொறுப்பும் தாய்மைப் பொறுப்பும் ஒன்றாக இணைந்த இந்த நிகழ்வு பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், தனது குழந்தைக்கு “TVK” எனப் பெயர் சூட்ட விருப்பம் இருப்பதாக அவர் தெரிவித்திருப்பதும் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

கர்ப்பகாலத்திலும் தளராத தேர்தல் பணியாற்றி வெற்றியைப் பெற்றதன் மூலம், பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் மனஉறுதியின் எடுத்துக்காட்டாக பல்லவி திகழ்கிறார்.
 

இதையும் படிங்க: போதை ஒழிப்பே முதல் இலக்கு..! புதிய டிஜிபியுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share