×
 

தென் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று எச்சரிக்கை! ஆகஸ்ட் 31 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்றும் நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் பரவலாகக் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாகக் கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லார் மற்றும் சோலையார் பகுதிகளில் தலா 76 மி.மீ (8 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தின் உபாசி, சின்கோனாவில் தலா 7 செ.மீ, வால்பாறையில் 6 செ.மீ, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திண்டுக்கல் நத்தம் பகுதிகளில் தலா 4 செ.மீ, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் முக்கியப் பகுதிகளில் 3 செ.மீ வரையிலும் மழை பதிவாகியுள்ளது. 

சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாகத் திருச்சி விமான நிலையத்தில் 38.5° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாகக் கோவை விமான நிலையத்தில் 22.6° செல்சியஸும், மலைப்பகுதிகளான கொடைக்கானல் மற்றும் உதகமண்டலத்தில் 12.8° செல்சியஸும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: மீனவர் பிரச்னையில் அரசின் இரட்டை வேடம் அம்பலம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் தாக்கு!

வானிலை முன்னறிவிப்பின்படி, இன்று மற்றும் நாளை (ஆகஸ்ட் 27, 28) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கும், தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: சூறாவளி காற்று எச்சரிக்கை! ஆகஸ்ட் 5 வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share