துணை முதல்வர் பங்கேற்ற கூட்டத்திலேயே கைவரிசை.. பணத்தை இழந்து கதறும் தம்பதி..!
புதுக்கோட்டையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காண வந்த தம்பதியிடமிருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக இளைஞரணி சார்பில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக மாநகர ஒன்றிய பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும் திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு மட்டுமே திருமண மண்டபத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையை சேர்ந்த அரசு வழக்கறிஞர் முருகேசன் தனது மனைவியுடன் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காண வந்துள்ளார். அப்போது இளைஞர் அணி கூட்டம் முடிந்த பிறகு மண்டபத்தை விட்டு வெளியே வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அரசு வழக்கறிஞர் முருகேசன் தனது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கூட்டத்தை பயன்படுத்தி கொண்ட சில மர்ம நபர்கள், முருகேசன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: முக்கியமான மசோதா மிஸ்ஸிங்.. ஆளுநர் ஒப்புதல் கொடுத்த 4 மசோதா என்னனு தெரியுமா?
பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்ட பிறகு முருகேசன் தனது பேண்ட் பாக்கெட்டில் சோதனை செய்தபோது அந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இதையறிந்த அவரது மனைவி மண்டபம் நுழைவாயிலேயே அமர்ந்து கதறி அழுதது காண்போருக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் முருகேசன், நான் திருமயம் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். எனது மைத்துனர் திருமணம் வரும் புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. அதற்காக பழைய நகைகளை நகை கடையில் கொடுத்துவிட்டு புதிய நகைகளை எடுப்பதற்காக கூடுதலாக ரூபாய் 50 ஆயிரம் பணத்தையும் எடுத்து வந்தேன். நகைகளை எனது மனைவி பையிலும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எனது பேண்ட் பாக்கெட்டிலும் வைத்திருந்தேன்.
இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்ப்பதற்காக நானும் எனது மனைவியும் திருமண மண்டபம் நுழைவாயிலில் காத்திருந்தோம். அவர் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த போது நானும் எனது மனைவியும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அப்போது கூட்ட நெர்சலில் என்னை யாரோ தள்ளிவிட்டனர் நான் கீழே விழுந்து விட்டேன் மீண்டும் எழுந்து பார்க்கும் பொழுது எனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது என்று வருத்தத்துடன் கூறினார். மேலும் இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அறிமுக கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை பார்க்க வந்த தம்பதியினிடமிருந்து ரூபாய் 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு மாசமா மன உளைச்சல்; தூக்கம் இல்லை.. பொதுக்கூட்டத்தில் புலம்பி தள்ளிய அன்புமணி!!