நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி..!!
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகாலாந்து மாநில ஆளுநராகப் பணியாற்றி வரும் இல.கணேசன், இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஆவார். 1945 பிப்ரவரி 16-ல் தஞ்சாவூரில் பிறந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவரும், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) முன்னாள் பிரச்சாரகரும் ஆவார். இளவயதில் தந்தையை இழந்த இல.கணேசன், தனது அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்து, திருமணம் செய்யாமல் பொதுவாழ்வுக்கு அர்ப்பணித்தார்.
ஆர்எஸ்எஸ்-ல் முழுநேர செயல்பாட்டாளராகப் பணியாற்றிய இவர், பின்னர் பாஜகவில் இணைந்து தமிழ்நாடு மாநில செயலாளர், தேசிய செயலாளர், துணைத் தலைவர், மாநிலத் தலைவர் என பல பொறுப்புகளை வகித்தார். தமிழ்நாட்டில் பாஜகவையும், தாமரை சின்னத்தையும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றவர் இல.கணேசன். இவர் பாஜகவில் இருந்தாலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் நட்புடன் இருந்தார்.
இதையும் படிங்க: மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு இங்கு ஓய்வெடுக்க மனமில்லை.. முதல்வர் மு.க ஸ்டாலின் உருக்கம்..!!
2016-ல் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2021ம் ஆண்டு ஆகஸ்டு 22-ல் மணிப்பூர் ஆளுநராகவும், 2022-ல் மேற்கு வங்கத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றினார். தொடர்ந்து 2023 பிப்ரவரி 20 முதல் நாகாலாந்து ஆளுநராகப் பொறுப்பு வகிக்கிறார். ஆளுநராக, நாகாலாந்தில் அமைதி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக முன்னாள் ஆயுதக் குழு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இவரது அரசியல் பயணம், திருக்குறள் மற்றும் பகவத்கீதை மீதான ஆர்வம், எழுத்தாற்றல் ஆகியவை அவரை தனித்துவமான தலைவராக வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் கீழே விழுந்து தலையில் காயமடைந்த இல.கணேசன், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், இதுவரை அவரது உடல்நலம் குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. விரைவில் அப்போலோ மருத்துவமனை சார்பாக இல.கணேசன் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் (83) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விடுதி உணவை சாப்பிட்ட அரசுப்பள்ளி மாணவிகள்.. வாந்தி, மயக்கத்தால் ஹாஸ்பிடலில் அட்மிட்..!