×
 

சந்தனப்பேழையில் உறங்கும் இல.கணேசன்.. 42 குண்டுகள் முழங்க உடல் தகனம்..!!

42 குண்டுகள் முழங்க நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நாகாலாந்து மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவருமான இல.கணேசன் (80) உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார். இவரது உடல், ஆகஸ்ட் 16ம் தேதியான இன்று சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் முப்படைகளின் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தேசிய கொடி போர்த்தப்பட்ட சந்தனப் பேழையில் இல.கணேசனின் உடலை முப்படை வீரர்கள் சுமந்து வந்தனர்.

இறுதி மரியாதையாக 42 குண்டுகள் மூன்று முறை முழங்கப்பட்டன, முப்படை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து இல.கணேசனின் உடலுக்கு குடும்பத்தார்கள் சார்பில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அண்ணன் மு.க.முத்துவின் உடல் தகனம்.. கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த தம்பி ஸ்டாலின்..!

தஞ்சாவூரைச் சேர்ந்த இல.கணேசன், ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக பொதுவாழ்வைத் தொடங்கி, பாஜகவில் மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், துணைத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். 2009, 2014 தேர்தல்களில் தென் சென்னையில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், 2016-ல் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும், பின்னர் மணிப்பூர், மேற்கு வங்க ஆளுநராகவும் பணியாற்றினார். 2023 முதல் நாகாலாந்து ஆளுநராக இருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அன்று சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் நிலைதடுமாறி விழுந்ததில் தலையில் காயமடைந்த இல.கணேசன், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்தக்கசிவு மற்றும் கோமா நிலையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின், இல.கணேசனின் எளிமையையும், அனைவரையும் அரவணைக்கும் பண்பையும் புகழ்ந்து, நேரில் அஞ்சலி செலுத்தினார். மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

இல.கணேசனின் மறைவு அரசியல் துறைக்கு பெரும் இழப்பு என பலரும் தெரிவித்தனர். அவரது பொதுவாழ்வு, எளிமையான பண்பு மற்றும் அரசியல் நாகரிகம் தமிழக அரசியலில் மறக்க முடியாத பங்களிப்பாக நினைவுகூரப்படுகிறது.

இதையும் படிங்க: நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share