"ரீல்ஸ் மட்டும் போதாது... உண்மையான சீரமைப்பு தேவை...!” நயினார் நாகேந்திரன் கருத்து..!
திருச்செந்தூர் பணம் வசூல் விவகாரத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இந்து அறநிலையத்துறையை சீரமைக்க தவெக அரசு மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆய்வு செய்து, சுவாமி தரிசனம் செய்ய ரூ. 4,000 லஞ்சம் வாங்கியோர் மீது இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தகுந்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்பிற்குரியது என்றார். தமிழகத்தில் சில திருக்கோவில்களில் நடைபெறும் முறைகேடுகளை தெளிவாக வெளிப்படுத்திய இச்சம்பவம், மனதில் சில கேள்விகளை எழுப்புகிறது என தெரிவித்துள்ளார்.
முதலில், லஞ்சமாகப் பெறப்பட்ட தொகையில் அர்ச்சகர்களையும் ஊழியர்களையும் தவிர உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் வேறு யாருக்கும் பங்கில்லை என்பதை தவெக அமைச்சர் எப்படி உறுதி செய்தார் என்று கேட்டுள்ளார். முந்தைய திமுக ஆட்சியில், அன்பளிப்பில் தொடங்கி குடமுழுக்கு வரை முறைகேடு நடந்து ஊழலின் உறைவிடமாக இந்து அறநிலையத்துறை மாறிவிட்ட நிலையில், துறைரீதியாக என்னென்ன மாற்றங்களைப் புதிய தவெக அரசு கொண்டுவந்துள்ளது என்று கேட்டுள்ளார்.
தரிசனக் கட்டணம் பெறும் திட்டத்தை "ஆன்லைன் ஸ்லாட்" எனும் புதிய பெயரில் அறிமுகப்படுத்தினால் மட்டுமே முறைகேடுகள் தடுக்கப்பட்டுவிடுமா என்று கேள்வி எழுப்பினார். உண்மையில், இந்து அறநிலையத்துறையை சீரமைப்பதைத் தனது முழுமூச்சாக அறநிலையத்துறை அமைச்சர் ஏற்றுக்கொள்ள நினைத்தால், முதலில் துறைரீதியான அடிப்படை மாற்றங்களை முன்மொழிய வேண்டும் திருக்கோவில்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிந்து, மக்கள் முன்னிலையில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அதலபாதாளத்தில் "Law & Order"... ஒரே அராஜகம்..!! தவெக ஆட்சியை வெளுத்த நயினார்..!
மேலும், கோவில் பூஜை நிர்வாகத்தில் தலையிடும் இந்து அறநிலையத்துறையின் அதிகார மீறல்களையும் தடுக்க வேண்டும் என்றும் திருச்செந்தூர் திருக்கோவிலை திருப்பதிக்கு ஈணையாக மாற்றும் வகையில், ஆன்லைன் வரிசை கண்காணிப்பு முறை போன்ற நவீன உக்திகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் விடுத்து ஆய்வு செய்வது, ரீல்ஸாக வெளியிட மட்டும் பயன்படுமே தவிர, எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவராது என்பதை தவெக அரசு உணர வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: "ரவுடிகளுக்கு பதவி"...! இன்னும் எத்தனை காவு கொடுக்கணும்..? முதல்வர் விஜயை சாடிய நயினார்..!