"தூய சக்தி பாப்பா".. கேமரா முன்னாடி முழங்குவதில் பயனில்லை..! நயினார் விமர்சனம்..!!
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை சம்பவங்களை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்தார்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தலை தூக்கி இருப்பதாகவும் கூறுகின்றனர். இதற்காக முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில், தூங்காமல் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய், "தூய" சக்தி பாப்பா என்று தமிழக வெற்றிக் கழக அரசை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். "மாற்று" சக்தி தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், நேற்று திருச்சி மாவட்டம் கீழப்புலிவார்ரோடு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது சிறுமி ஒருவரும் கடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதாக கூறினார்.
அதிலும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் போர்வையில், இரண்டு நாட்களுக்கு முன் முதல்வர் விஜய் வெற்று விளம்பர உரையாற்றிய அதே திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சிறுமி கடத்தப்பட்டுள்ள சம்பவம், தவெக அரசின் நிர்வாகத் திறனை கேள்விக்குறியாக்குகிறது என்றார்.
இதையும் படிங்க: முந்தைய அரசின் ஊழல்களை மூட நினைக்கிறீங்களா..? நயினார் சரமாரி கேள்வி..!!
சின்னஞ்சிறு சிறுமிகளின் பாதுகாப்பைக் கைகழுவி விட்டு, கேமராவைக் கண்டதும் சிங்கம் போல முழங்குவதால் எந்தப் பயனும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். எனவே, முதல்வர் விஜய் சட்டம் ஒழுங்கை சரிவரப் பேணி, உடனடியாக தமிழக பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: அவசர சிகிச்சைப் பிரிவில் அரசு மருத்துவத்துறை..! நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!