வாடிய விவசாயிகளின் முகத்தில் புன்னகை..! கள் இறக்க பரிந்துரை... நயினார் வரவேற்பு.!!
கள் இறக்க பரிந்துரைத்து இருப்பதை நயினார் நாகேந்திரன் வரவேற்று உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்பதாக அறிவித்துள்ளார். கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற அந்த ஆணையத்தின் பரிந்துரையை தமிழக பாஜக சார்பில் மனமுவந்து ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான கள்ளை இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற ஆணையத்தின் பரிந்துரை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் என்றும், கிராமப்புறப் பொருளாதாரத்தில் புதிய ஒளியேற்றும் நல்வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரசாயனக் கலப்புள்ள மது அரக்கனுக்கு எதிராக பாஜக தொடுத்த அறப்போர்களில், மக்களின் உயிரைக் குடிக்கும் நச்சு மதுவை ஒழித்து மண்ணின் பானமான கள்ளை அனுமதிக்க வேண்டும் என்ற முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்து வந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் நினைவூட்டினார். கள்ளுக்கு ஆதரவாக தான் தொடர்ந்து வாதிட்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் இன்றைய ஆணையத்தின் பரிந்துரை மூலம் பாஜகவின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வெற்றி கிடைத்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!
விவசாயிகளின் வாடிய முகத்தில் புன்னகை பூக்கவும், கள்ளச்சாராய மரணங்கள் என்னும் கருநிழல் தமிழகத்தை விட்டு விலகவும், தற்போதைய அரசு இந்தப் பரிந்துரையை வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடக் கூடாது என அவர் வலியுறுத்தினார். காலம் தாழ்த்தாமல், உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்கவும் சந்தைப்படுத்தவும் உடனடியாக அனுமதி வழங்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் அவர்களை கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம்..! சொகுசுக்காக வரிப்பணத்தை வீணடிப்பதா.? நயினார் காட்டம்.!