கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?
கர்நாடகாவில் போலி என்கவுண்டர் நடந்திருப்பதாகவும் சிபிஐ விசாரணை தேவை என்றும் நயினார் வலியுறுத்தினார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் அம்மாநில வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட போலி என்கவுண்டர் என்பதை பிரேதப் பரிசோதனை அறிக்கை நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கர்நாடக வனப்பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க சிபிஐ விசாரணை அவசியம் என ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கை அந்தக் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
10 அடிக்கும் குறைவான மிக நெருக்கமான தொலைவிலிருந்து அவர்கள் சுடப்பட்டிருப்பது வனத்துறையின் கொடூரமான முகத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் கர்நாடக காவல்துறையின் விசாரணையில் துளியும் நம்பிக்கை இல்லை எனக் கூறிய நயினார் நாகேந்திரன், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரவும் இந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அமித்ஷா முகத்திற்கு நேராகவே சொன்ன சி.எம். விஜய்.. தமிழகத்தின் முக்கிய திட்டத்திற்கு வந்த திடீர் சிக்கல்...!
தவெக அரசு இந்த விஷயத்தில் மெளனம் காப்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செய்யும் துரோகம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.எனவே தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தனது கூட்டணிக் கட்சி ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என அம்மாநில அரசை வலியுறுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?... கட் அண்ட் கறாராய் முடிவை சொன்ன சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்...!