புழு விழுந்த உணவு, துர்நாற்ற நீர்! இது சமூகநீதி விடுதியா? நோய் பரப்பும் கூடாரம்.. நயினார் விளாசல்..!
முறையான பராமரிப்பு இல்லாமல் சமூக நீதி விடுதிகள் நோய் பரப்பும் கூடாரங்களாக மாறிவிட்டதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
சமூக நீதி விடுதிகள் என்பவை தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு, குறிப்பாக பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட, மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை வழங்கும் விடுதிகளாகும்.
இவை சமூக நீதி மற்றும் மக்கள் மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்காக தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த விடுதிகள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்யவும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் முக்கிய பங்காற்றுகின்றன.
இதற்கிடையே, சென்னையில் 36 அரசு சமூக நீதி விடுதிகள் பராமரிப்பின்றி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி கொட்டியும் இந்த நிலை! கழிப்பறையை கூட விட்டு வைக்காத திமுக ஊழல்.. சாடிய நயினார்..!
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான 36 அரசு சமூகநீதி விடுதிகள்" எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி நோய் பரப்பும் கூடாரங்களாகி, வாழத்தகுதியற்ற வசிப்பிடங்களாக உருமாறி வருவது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.
புழுவிழுந்த உணவும், துர்நாற்றம் வீசும் நீரும், பராமரிப்பில்லாத கழிவறைகளும், சிதிலமடைந்த கட்டடங்களும் உள்ள அரசு விடுதிகளை வைத்துக் கொண்டு ஏழை எளிய மாணவர்களின் சமூகநீதியை நிலைநாட்டப்போவதாக திமுக அரசு பெயர்மாற்றம் செய்தது, மக்கள் வரிப்பணத்தைக் கையாடல் செய்ததை மறைக்கத்தானோ என்ற சந்தேகத்தை எழுப்பினார்.
காரணம், 23 அரசு விடுதிகளில் நூலகம் அமைப்பதற்காக 21 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக திமுக அரசு மார்த்தட்டி வரும் வேளையில், பல நூலகங்களில் புத்தகங்களோ, முறையான இணைய வசதியோ இல்லை என்றும் மாலையில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய சிற்றுண்டி வழங்கப்படாததோடு, மாணவர்களின் சுகாதார மேம்பாட்டிற்காக வழங்கப்படும் 150 ரூபாய்கூட அவர்களின் கைகளில் சென்று சேரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அதை விட போதிய பணியாளர்களை பணியமர்த்தாததால், விடுதிக் கழிவறைகளை மாணவர்களே கழுவும் கொடுமையும் அரங்கேறி வருவதாக தெரிவித்த நயினார் நாகேந்திரன், மாநிலத்தின் தலைநகரில் உள்ள விடுதிகளே கவலைக்கிடமாக உள்ள நிலையில், தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் அரசு விடுதிகளின் நிலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பினார்.
மாணவர்களின் நலனை விடுத்து, விளம்பரத்தை தூக்கிப்பிடித்து, அநீதி இழைக்கும் இந்த போலி சமூகநீதி மாடல் அரசை மக்கள் விரைவில் விரட்டியடிப்பார்கள் என்று சாடினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!