×
 

"இது திட்டமிட்ட கொலை; திமுக அரசுதான் முழு காரணம்" - நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுக அரசு தான் காரணம் என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர் பூரண சந்திரன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இதற்குத் திமுக அரசே முழுப் பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உயிரிழந்த பூரண சந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், அவரது குடும்பத்தினருக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் திரட்டப்பட்ட 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் திமுக அரசு வேண்டுமென்றே அவமதித்துள்ளதாகச் சாடிய நயினார் நாகேந்திரன், இந்த அலட்சியத்தால்தான் ஒரு உயிர் பறிபோயுள்ளது என்று ‘பஞ்ச்’ வைத்தார். கடவுள் மறுப்புக் கொள்கையைப் பேசிய பெரியார் சிலை முன்பே ஒரு பக்தர் தீக்குளித்திருக்கிறார் என்றால், அந்த வலியின் அர்த்தத்தை இந்த அரசு இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் என்று காட்டமாகத் தெரிவித்தார். ‘ஸ்பாட்’டில் இருந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியனும் இந்த விவகாரத்தில் திமுக அரசின் இந்து விரோதப் போக்கை வன்மையாகக் கண்டித்தார்.

உயிரிழந்த பூரண சந்திரனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு உடனடியாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் ‘டிமாண்ட்’ வைத்துள்ளார். மேலும், உயிரிழந்த பக்தரின் ஆன்மா சாந்தியடைய நாளை மாலை தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அவரது உருவப்படத்தை வைத்து ‘மோட்ச தீபம்’ ஏற்றப்படும் என்றும் அறிவித்தார். திமுக அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு, இனிமேலாவது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்த அவர், இல்லையெனில் போராட்டக் களம் அதிரும் எனச் சூசகமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “விஜய் அருகில் நின்னா தூய்மை ஆகிடுவாங்களா?” – சிபிஐ வீரபாண்டியன் கேள்வி!

இதையும் படிங்க: "திமுக கூட்டணியில் இணைய தயார்! - திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share