தன் கட்சி ஊழலையே தட்டிக் கேட்க முடியாத CM..! லஞ்ச வேட்டை..! நயினார் தாக்கு.!
லஞ்சம் குற்றச்சாட்டு தொடர்பாக முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
ஊழலற்ற ஆட்சி என்பது வெற்று முழக்கமா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். தவெக நிர்வாகியின் லஞ்ச வீடியோ விவகாரத்தில் பல்வேறு கேள்விகள் எழுவதாக தெரிவித்துள்ளார். உதட்டளவில் நேர்மை பேசி, உள்ளுக்குள் ஊழல் செய்யும் தவெக-வின் நிஜ முகம் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு வீடியோ மூலம் அம்பலமாகி இருப்பதாக குறிப்பிட்டார்.
மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீரா, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகித் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது என்றார். முதல்வர் ஒருபுறம் நேர்மை பேச, அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மறுபுறம் லஞ்ச வேட்டையாடி வருவது தவெக அரசின் இரட்டை வேடத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது என்று கூறினார்.
தன் கட்சியினரின் ஊழலையே தட்டிக்கேட்க முடியாத முதல்வர் விஜய்யால் எப்படி மாநிலத்தை நேர்மையாக வழிநடத்த முடியும்? என்ற கேள்வி எழுகிறது என்றார். ஒப்பந்ததாரர்களை மிரட்டி, லஞ்சப் பணத்தை வெளிப்படையாக வாங்கும் தவெக நிர்வாகி வீராவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 'லஞ்சம் இல்லாத தமிழகம்' என்பது வெறும் விளம்பர வாசகம் மட்டுமே என்பதை தவெக அரசு நிரூபித்துள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் செங்கோட்டையனை திடீரென சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ... அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி!
எனவே, தவெக நிர்வாகி லஞ்சம் வாங்கியது உண்மையா என்பதை தீர விசாரித்து, புகார் உண்மையெனில் உடனடியாக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: “ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை ஓட்டுச்சாம்..” - தவெகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்... வைரலாகும் ஆடியோ...!