×
 

நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்: இனி வாரத்தில் 2 நாட்கள் முகாம்! அமைச்சர் மா.சு. அறிவிப்பு!

தமிழக அரசின் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் இனி வாரத்தில் 2 நாட்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மருத்துவ முகாம் திட்டம், இனி வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் இன்று நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்குக் கலைஞர் மருத்துவக் காப்பீடு அட்டை, கர்ப்பிணிப் பெண்களுக்கான சத்துணவுப் பெட்டகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களை அவர் உடனடியாக வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  "தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் அரியலூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் முகாம்கள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதுவரை 800 முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 12 லட்சத்து 36 ஆயிரம் மக்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். தொடக்கத்தில் சனிக்கிழமைகளில் மட்டும் நடத்தப்பட்ட இந்த முகாம்கள், தற்போது மக்கள் நலன் கருதி வியாழன் மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் இந்த முகாம்களில் முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் மட்டும் 11 முகாம்கள் மூலம் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக வடசென்னை முழுவதும் இந்த முகாம்கள் முழுவீச்சில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். இந்த முகாம்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, கர்ப்பிணிப் பெண்களுக்கான சத்துப் பெட்டகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் ஆகியவை அதிகாரிகளால் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. "மக்களின் குடியிருப்புப் பகுதிக்கு அருகிலேயே உயர்தர மருத்துவச் சேவையைக் கொண்டு சேர்ப்பதே இந்த அரசின் இலக்கு" என அமைச்சர் மா.சு பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்து விபத்துகளைத் தடுக்க அதிரடி நடவடிக்கை! போக்குவரத்துத் துறை புதிய உத்தரவு!

இதையும் படிங்க: கேரளா டூ தமிழ்நாடு நோ என்ட்ரி! பறவை காய்ச்சலால் எல்லையில் கெடுபிடி! பொது சுகாதாரத்துறை அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share