×
 

ஆகஸ்ட் 7 ஏன் முக்கியம்? நட்பு தினத்துடன் இன்று இதையும் கொண்டாடுங்கள்! பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்!

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறிப் பொருட்களை வாங்குமாறும், நெசவாளர்களுக்கு ஆதரவான வீடியோக்களை பகிருமாறும் மக்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் இன்று தேசிய கைத்தறி தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், இந்தியாவின் பாரம்பரிய கைத்தறித் தொழிலுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். குறைந்தபட்சம் ஒரு கைத்தறிப் பொருளையாவது வாங்கி பயன்படுத்துவதுடன், அதன் சிறப்பை சமூக ஊடகங்கள் வாயிலாக மற்றவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1905-ம் ஆண்டு இதே நாளில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணித்து, உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடம் வலுப்படுத்திய இந்த இயக்கம், பின்னர் இந்தியாவின் தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் மாறியது.

இதனை நினைவுகூரும் வகையிலும், நாட்டின் பாரம்பரிய நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களை கவுரவிக்கும் வகையிலும் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

இந்த நாளையொட்டி சமூக ஊடகத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிய வீடுகளில் இருந்தபடியே நெசவாளர்கள் பல்வேறு வகையான அழகிய கைத்தறித் துணிகளை உருவாக்கி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களின் உழைப்புக்கும் திறமைக்கும் மக்கள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கைத்தறிப் பொருட்களை வாங்குவதன் மூலம் நெசவாளர் குடும்பங்களுக்கு நேரடியாக ஆதரவளிக்க முடியும் என்று குறிப்பிட்ட பிரதமர், அவற்றை வாங்கிய பின்னர் அதன் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் வீடியோ அல்லது பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிருமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறு மற்றும் ஏழை குடும்பங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறினால்தான் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்திய நெசவாளர்களின் திறமையும் கைவினைத் திறனும் உலக அளவில் சென்றடைய பொதுமக்களின் ஆதரவு முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கைத்தறிப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுடன், அவற்றை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே தேசிய கைத்தறி தினத்தில் பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம்! மெட்டா குழுவை நேரில் அழைத்த மத்திய அரசு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share