நவோதயாவுக்கு NO..! தமிழ்நாட்டுக்கு என்ன பிரச்சனை..? 3 வாரம் கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்..!
நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் மூன்று வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கல்வித்துறையில் முக்கியமான மத்திய அரசின் திட்டங்களில் ஒன்று ஜவாஹர் நவோதயா வித்யாலயங்கள். ஊரகப் பகுதிகளில் உள்ள திறமையான மாணவர்களுக்கு தரமான கல்வியை இலவசமாக வழங்கும் வகையில் இந்தப் பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ஆனால், தமிழ்நாடு மட்டும் இந்தத் திட்டத்தை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நிராகரித்து வருகிறது. இந்த நிலைக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கடும் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு ஏன் மட்டும் இந்தத் திட்டத்தை ஏற்க மறுக்கிறது என்று விளக்கம் கேட்ட நீதிமன்றம், மாநில அரசுக்கு உரிய பதிலளிக்க காலக்கெடு விதித்துள்ளது.
நவோதயா பள்ளிகள் மத்திய அரசின் முழு நிதியுதவியில் இயங்கும் குடியிருப்பு பள்ளிகளாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று என்ற அடிப்படையில் நிறுவப்பட வேண்டும் என்பது இலக்கு. இந்தப் பள்ளிகளில் மூன்று மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆங்கிலம் - தமிழ் என்ற இரு மொழிக் கொள்கை தான் அமலில் உள்ளது.
இந்த இரு மொழிக் கொள்கைக்கு எதிராக நவோதயா பள்ளிகள் இந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்துவதாக மாநில அரசு வாதிடுகிறது. இது தமிழ்நாட்டின் மொழிக் கொள்கைக்கும், கலாச்சார சுயாட்சிக்கும் எதிரானது என்பது அதன் நிலைப்பாடு. மேலும், மாநிலத்தின் சொந்த கல்வித் திட்டங்கள் போதுமானவை என்றும், உயர் சேர்க்கை விகிதம் நாட்டிலேயே அதிகம் என்றும் தமிழ்நாடு சுட்டிக்காட்டுகிறது.
இதையும் படிங்க: தரமற்ற உணவுக்கு CHECK..! விடுதி காப்பாளர்களுக்கு சமூகநீதி துறை அதிரடி உத்தரவு..!
இந்த விவகாரம் பல ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கிறது. 2017-ல் சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை அமர்வு) ஒரு பொது நல வழக்கின் அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்கு நவோதயா பள்ளிகளை நிறுவ நிலம் மற்றும் உள்கட்டமைப்பு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அப்போது உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், இன்று விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தது. நவோதயா பள்ளிகளை தமிழ்நாடு மட்டும் நிராகரிக்க என்ன காரணம் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: "CBI விசாரிக்கட்டும்"..! ஆம்ஸ்ட்ராங் Case-ல் Shock Move..! அதிரடி காட்டிய தமிழக அரசு..!!