×
 

நீட் மோசடி வழக்கு: ஜூலை 2க்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வில் இனிமேல் முறைகேடுகள் நடக்காமல் எப்படி நடத்தப் போகிறீர்கள் என்பது குறித்து ஜூலை 2ஆம் தேதிக்குள் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நீட் தேர்வு மோசடி விவகாரத்தில், இனிவரும் காலங்களில் முறைகேடுகள் நடக்காமல் தேர்வை எப்படி நடத்தப் போகிறீர்கள் என்பது குறித்து ஜூலை 2ஆம் தேதிக்குள் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட் தேர்வில் அரங்கேறிய அடுக்கடுக்கான மோசடிகள் காரணமாக ஒட்டுமொத்த தேசிய தேர்வு முகமையையும் (NTA) கலைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல மனுக்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்மா மற்றும் அலோக் ஆரதே ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் காரசாரமான விசாரணைக்கு வந்தன. கடந்த 25ஆம் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது, இதுகுறித்து 3 நாட்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது ராதாகிருஷ்ணன் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீட் தேர்வைச் சீரமைக்க உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய 60 பரிந்துரைகளும், 35 நீண்ட காலப் பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதைக் கேட்டு கடும் அதிருப்தியடைந்த நீதிபதிகள், "இவ்வளவு நிபுணர் குழுக்கள் அறிக்கை தாக்கல் செய்த பின்னரும் நீட் தேர்வில் எப்படி இவ்வளவு பெரிய மோசடி நடைபெற்றது? இந்த பரிந்துரைகளைச் செயல்படுத்த இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?" எனத் தங்களின் கேள்விக் கணைகளால் மத்திய அரசுத் தரப்பைத் திணறடித்தனர். இதற்குப் பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

இதையும் படிங்க: ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!

இருப்பினும், இந்த விளக்கத்தால் திருப்தியடையாத நீதிபதிகள், வரும் ஆண்டுகளில் எந்தவித மோசடியும், குளறுபடியும் இல்லாமல் நீட் தேர்வை அரசு எப்படிப் பாதுகாப்பாக நடத்தப் போகிறது என்பது குறித்த உத்திரவாதத்துடன் கூடிய விரிவான பிரமாணப் பத்திரத்தை வரும் ஜூலை 2ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டனர். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா, நீட் விவகாரத்தை தற்போது பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாகக் கண்காணித்து வருகிறார் என்று நீதிமன்றத்தில் முக்கியப் பதிவை மேற்கொண்டார். உச்சநீதிமன்றத்தின் இந்த கிடுக்கிப்பிடி உத்தரவு, தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய கல்வித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்யாதே..!! நாளை மாநிலம் தழுவிய திக ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஆதரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share