நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு! அரசியல் கடந்து ஆதரவு தர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நீட் என்பது வெறும் தேர்வு கிடையாது; அது பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகளும், எண்ணற்ற குடும்பங்களின் கண்ணீரும் ஆகும் என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் முன்னெடுத்துள்ள கையெழுத்துப் பிரச்சார இயக்கத்தில் தனது கையொப்பமிட்டு முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல்கள், அநீதிகள் மற்றும் தற்கொலைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 'நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு' என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு அமைப்பினர் மாநிலம் தழுவிய கையெழுத்துப் பிரச்சார இயக்கத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த இயக்கத்தின் பிரதிநிதிகள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.
அப்போது நீட் ஒழிப்புக்கான ஆவணப் படிவத்தில் தனது கையொப்பத்தைப் பதிவு செய்து முழு ஆதரவை நல்கிய மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுதொடர்பாக உருக்கமானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீட் என்பது ஒரு சாதாரண தேர்வல்ல; எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள்! குடும்பங்களின் ஓயாத கண்ணீர்! அதனால்தான் எந்தவித சமரசமுமின்றி, தொடக்கம் முதலே நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு! என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து போராடி வருகிறோம் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "ஜோசியர் தான் சொன்னாராமே".? யார் ஆசைக்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்.? ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!
தொடர்ந்து அனைத்துத் தரப்பினருக்கும் அறைகூவல் விடுத்துள்ள அவர், நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் முன்னெடுத்துள்ள இந்த அறப்போர் என்பது அரசியல் எல்லைகளையும் கட்சி வேறுபாடுகளையும் கடந்தது; இது நமது தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கான வாழ்வுரிமைப் போராட்டம். எனவே, திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள், இளைஞரணியினர், மாணவ கண்மணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்த கையெழுத்து இயக்கத்திற்குத் தங்களது பேராதரவை வழங்கிட வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகள் சாந்தி மறைவு! மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!