விஜய் ஆட்சியிலும் விடிவில்லையா?... கண்ணுக்கு முன்பு களவு போகும் பல நூறு கோடி... எதிர்கால சந்ததிக்கு பேரிடி...!
தொடர்ச்சியாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிமவளக் கொள்ளை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக வெற்றிக்கழக அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
தென் மாவட்டங்களில் இருந்து தென்காசி புளியரை வழியாக கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்கள். சாலைகள் முழுவதும் அணிவகுத்து நிற்கும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல். தமிழகத்தில் வாழும் வருங்கால சந்ததியினருக்கே கனிமவளம் இல்லாமல் போகும் அவலம்
தென் மாவட்டங்களாக இருக்கக்கூடிய தென்காசி நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளிலிருந்து புறப்படும் எம்சாண்ட் மணல், கருங்கற்கள், ஜல்லி கற்கள் போன்ற கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.
இந்த கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தப்படுவது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக பலரும் நீதிமன்றம் காவல்துறை அரசு பல்வேறு நிர்வாகங்களுக்கு புகார் அளித்து இருக்கின்ற போதிலும் அதை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
இதையும் படிங்க: வீட்டுக்குள் புகுந்து கொலை மிரட்டல்.! மேயருக்கே இந்த நிலையா..? நெல்லையில் பரபரப்பு..!!
முக்கியமாக தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் களியக்காவிளை பகுதிகள் வழியாக கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் கனிம வள கொள்ளைகளை தடுக்கும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உருவாக்கப்படும் கனிம வளங்கள் அனைத்தும் கேரளாவிற்கு கடத்திச் செல்வதற்காக மாபியா கும்பல் தென்காசி புளியரைச் சாலையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் கனிம வளங்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை கேரளாவிற்கு எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் மாபியா கும்பல்கள் தொடர்ந்து லாரிகளில் குறைந்த அளவு அனுமதி பெற்று விட்டு அதிக அளவிற்கு டன் கணக்கில் கனிம வளங்களை தமிழகத்திலிருந்து கொள்ளையடித்து செல்கின்றனர்.
புளியரைப் பகுதியில் செயல்படும் சோதனை சாவடிகளில் பணிகளில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்களும் காவல்துறையைச் சார்ந்த அலுவலர்களும் எந்த லாரிகளையும் இரவு நேரத்தில் ஆய்வு செய்யாமல் லாரி டிரைவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு சரளமாக கனிமவள கொள்ளைக்கு துணை போகின்றனர்.
இரவு நேரங்களில் தென்காசி செங்கோட்டை, புளியரை சாலைகளில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு லாரிகளின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கிறது. சாலைகள் முழுவதும் அதிக ஒலி எழுப்பும் ராட்சச லாரிகள் எப்பொழுதும் சென்று கொண்டே இருக்கும் நிலையும் பார்க்க முடிகிறது.
தொடர்ச்சியாக நாள் ஒன்றுக்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் தன் கணக்கில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் வாழும் வருங்கால சந்ததியினருக்கே கனிம வளம் இல்லாத நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் விவசாயம் அழிந்து போகக்கூடிய சூழ்நிலையை கடையம் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய கல்குவாரிகள் உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதால் இயற்கை வளங்கள் அனைத்தும் அழிக்கப்படுகிறது.
கனிமவளத்துறை அமைச்சர் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கண்துடைப்பாக தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். இருந்த போதிலும் எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கனிமவளக் கொள்ளைகள் தொடர்ச்சியாக குறையாமல் அதிகளவில் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புளியரை பகுதிகளில் வேகமாக செல்லும் இந்த லாரிகளால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பல மனுக்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் ஆட்சியாளர்களிடம் கொடுத்த போதிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களுக்கு வீடு கட்டுவதற்கு கட்டுமான பொருட்கள் கிடைப்பதில்லை என உள்ளூர் மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையை உலுக்கிய தந்தை, மகன் கொடூர கொலை..! மேலும் 2 பேர் சரண்... தொடரும் விசாரணை..!