"மிசா, எமர்ஜென்சியை பார்த்த கட்சி தி.மு.க"..! தவெக சரிவை சந்திப்பது உறுதி..! உதயநிதி திட்டவட்டம்..!
சிறையில் இருக்கும் mla மார்க்கண்டேயனை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
தமிழ்நாட்டின் அரசியல் களம் சமீபகாலமாக கடும் பதற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு எதிராக வைத்த கடுமையான பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தப் பேச்சு தொடர்பாக போலீசார் அவரைக் கைது செய்து, தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் எதிர்க்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜயின் சமீபத்திய கருத்துகளுக்கு பதிலடியாக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். “தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு வெட்கமில்லையா? நாங்கள் கோமாளிகளா? சட்டமன்றத்தைக் கூட்டுங்கள், அப்போது உங்கள் எலும்பு முழுதும் உடைந்த நிலையில்தான் திரும்ப அனுப்புவோம்” என்பது உள்ளிட்ட வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சு வீடியோவாகப் பரவியதைத் தொடர்ந்து, புகார் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்து, ஜூலை 20, 2026 அன்று அதிகாலையில் விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் இல்லத்தில் இருந்து அவரைக் கைது செய்தனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ மார்க்கண்டேயனை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
இதையும் படிங்க: விஜய் ஆட்சியிலும் விடிவில்லையா?... கண்ணுக்கு முன்பு களவு போகும் பல நூறு கோடி... எதிர்கால சந்ததிக்கு பேரிடி...!
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகார சோபா மாடல் அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சந்தித்ததாகவும் சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப் பணி மற்றும் மக்கள் பணியாற்றிடம் உத்வேகத்துடன் மார்க்கண்டேயன் இருந்ததாகவும் அவரிடம் நலம் விசாரித்ததாகவும் தெரிவித்தார். மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் Sofa அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி என உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீட்டுக்குள் புகுந்து கொலை மிரட்டல்.! மேயருக்கே இந்த நிலையா..? நெல்லையில் பரபரப்பு..!!