×
 

கஞ்சா போதையில் வெறியாட்டம்... டீ கடையில் பெட்ரோல் குண்டு வீசி இருவர் வெட்டிக்கொலை... 6 பேர் படுகாயம்...!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே இருவர் வெட்டி படுகொலை. ஆறு பேர் படுகாயம். கஞ்சா போதையில்  ஒன்பது பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல். காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு பகுதியில்  9 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அவர்கள் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை அரிவாளால் வெட்டியதோடு அவர்களின் இருசக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டனர்.  மூன்று இருசக்கர வாகனங்களில் 9 பேர் கொண்ட இந்த கும்பல் நாங்குநேரி பெரும்பத்து பகுதியை அடைந்துள்ளனர். அங்கு தேநீர் கடையில் பெட்ரோல் குண்டை  வீசியுள்ளனர்.தேனீர் குடிக்க கூடியிருந்த நபர்கள் அதிர்ச்சியில் அங்கிருந்து  தப்ப முயன்ற நிலையில் போதையில் இருந்த ரவுடி கும்பல் கூடியிருந்தவர்களை தாங்கள் வைத்திருந்த அரிவாள்களால் சரமாறியாக வெட்டியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ஜான் என்ற மாற்றுத்திறனாளி பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல் சூளையில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அங்கு கூடியிருந்த பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, புளியங்குளத்தைச் சேர்ந்த சசிகுமார், மற்றும் வீராங்குளத்தை கணேசன் ஆகிய நபர்கள்  படுகாயம் அடைந்தனர்.இவர்களில் நெல்சன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மற்றவர்கள் நாங்குநேரி மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 கஞ்சா போதையில் டீ கடையில் நின்றவர்கள் சாலையில் சென்றவர்கள் என பலரை வெட்டிய கும்பலை பிடிக்க காவல்துறை சார்பில் மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளது. சம்பவ இடத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதையும் படிங்க: மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்..! அரசு மரியாதை செலுத்திய மருத்துவர்கள்...!

 கஞ்சா போதையில்  கொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது ஜாதிய மோதலா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.  அப்பாவி பொதுமக்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்தை அடுத்து  உயிரிழந்தவர்கள் காயம் பட்டவர்களின் உறவினர்கள் சமுதாய அமைப்பினர் நாங்குநேரி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி  குற்றவாளிகள் கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறி கலைந்து போக செய்தனர். நாங்குநேரி சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆணவக் கொலை அல்ல..! இளம்பெண் உயிரிழப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share