×
 
☰

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுகிறாரா? வானதி சீனிவாசன் சொன்னது என்ன?

தலைவர் முதல் தொண்டர் வரை அனைவரும் சிறப்பான பணிகளை முடிப்பதே எங்களின் ஒரே நோக்கம் என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு பொது வாழ்க்கை சேவையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட மகளிர் அணியினர் மிகப்பெரிய ரங்கோலி கோலம் வரைந்து கவனத்தை ஈர்த்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மகளிர் அணியின் மூத்த நிர்வாகியும், ஆந்திர மாநில பா.ஜ.க. பொறுப்பாளருமான வானதி சீனிவாசன், மகளிர் அணியினருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாவட்டத் தலைவர் ஜெகதீசன், ஓம் சக்தி பெருமாள், அதிசயம் குமார், மகளிர் அணி நிர்வாகிகள் ஜெயலட்சுமி, காயத்ரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், தமிழக அரசியல் சூழல் குறித்தும் விவசாயப் பிரச்சினைகள் குறித்தும் கருத்து தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களை நடத்த அனுமதிக்காமல் கடுமையான அடக்குமுறை கையாளப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) அதே போன்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: அத்வானிக்கு என்ன ஆச்சு? 98 வயதில் மருத்துவமனையில் அட்மிட்! உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமனம் தொடர்பான யூகங்களுக்குப் பதிலளிக்க இயலாது என்று தெரிவித்த அவர், “யாருக்கு எந்த நேரத்தில் எந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது கட்சித் தலைமையின் முடிவே. தலைவர் முதல் தொண்டர் வரை அனைவரும் சிறப்பான பணிகளை முடிப்பதே எங்களின் ஒரே நோக்கம்” என்று கூறினார்.

அரிசி விலை உயர்வு குறித்து அவர் அதிகக் கவனம் செலுத்தினார். மழையின்மை, எல் நினோ போன்ற காலநிலை மாற்றங்களால் உற்பத்தி பாதிக்கப்படும் சூழலில், அரிசியைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறிப்பாக அரிசி ஆலைகள் மற்றும் மொத்த விற்பனையாளர்களைத் தமிழக அரசு கண்காணித்து, விலை ஏற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உறுதி அளிக்க வேண்டும் என்றார். இதற்கு மத்திய அரசு முழுமையான உறுதுணையை வழங்கும் என்று உறுதியளித்த அவர், அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளதை நினைவுபடுத்தினார்.

வானதி சீனிவாசன் மேலும், மத்திய அரசின் திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நேரடிப் பலன் கிடைக்கும் என்றும், மாநில அரசு ஒத்துழைப்புடன் செயல்பட்டால் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளை எளிதில் சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி மூலம் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சி தொடரும் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

இதையும் படிங்க: நம்ம நாட்டாமைக்கு அடிச்சுது ஜாக்பாட்..!! இவ்ளோ பெரிய பதவியா..?? தொக்காய் தூக்கி கொடுக்கும் மோடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share