×
 

புதிய தலைமைச் செயலகம் இப்படித்தான் இருக்குமாம்... பட்டினப்பாக்கத்தின் புதிய முகம்!! வைரல் புகைப்படம்..!!

கோபுரங்கள், விசாலமான பிரகாரங்கள், அழகிய தூண்கள் மற்றும் காற்றோட்டமான முற்றங்கள் போன்ற திராவிட அம்சங்கள், நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படும். 

தமிழ்நாடு அரசு, நீண்டகாலமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கிவரும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில், சென்னை பட்டினப்பாக்கம் (ஃபோர்ஷோர் எஸ்டேட்) பகுதியில் புதிய வளாகம் அமைப்பதற்கு கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பிரமாண்டத் திட்டம், அரசு நிர்வாகத்தை நவீனமயமாக்கி, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் ₹1,200 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த வளாகம், மொத்தம் 25.55 ஏக்கர் நிலப்பரப்பில் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பளவுடன் திட்டமிடப்பட்டுள்ளது. 15 அடுக்குகள் கொண்ட உயர் மாடிக் கட்டடமாக வடிவமைக்கப்படும் இது, நவீன வசதிகளுடன் கூடியதாக இருக்கும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை ஆகியவற்றின் நிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக கிண்டி மற்றும் நந்தம்பாக்கம் பகுதிகளும் பரிசீலிக்கப்பட்டாலும், போதுமான அரசு நிலம் உடனடியாகக் கிடைத்ததால் பட்டினப்பாக்கம் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டது. கட்டடக்கலையில் தமிழகத்தின் பாரம்பரிய திராவிடப் பாணியும் பிரிட்டிஷ் காலக் கம்பீரமும் இணைந்திருக்கும். கோபுரங்கள், விசாலமான பிரகாரங்கள், அழகிய தூண்கள் மற்றும் காற்றோட்டமான முற்றங்கள் போன்ற திராவிட அம்சங்கள், நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படும். 

இதையும் படிங்க: பெண் ஊழியர்களுக்கு கழிப்பறை கூட இல்லை: புதிய தலைமைச் செயலகம் கட்டாயம் கட்டப்படும் - அமைச்சர் மரிய வில்சன்!

அதேவேளையில், சமச்சீரான வடிவமைப்பு, வளைவு வாசல்கள், உயர்ந்த உட்கூரைகள் மற்றும் அகலமான தாழ்வாரங்கள் உள்ளிட்ட பிரிட்டிஷ் கட்டடக் கலை அம்சங்களும் இடம்பெறும். இதனால் பழமையும் புதுமையும் கலந்த கம்பீரமான தோற்றம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.திட்டத்தை விரைவுபடுத்த பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். 

இதற்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று கட்டடக் கலை நிபுணர்களைத் தேர்வு செய்ய, இரண்டாவது ஆரம்பக்கட்ட வரைபடங்களை ஆய்வு செய்து இறுதி செய்ய, மூன்றாவது இறுதி வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உயர்மட்டக் குழுவாகச் செயல்படும்.போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை சுமார் 3.5 கி.மீ. நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. 

சுற்றுச்சூழல் மற்றும் பிற அனுமதிகள் பெற்ற பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கும். கடற்கரைக் காற்று, பசுமை வளாகம், டிஜிட்டல் வசதிகள், விரிவான வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுடன் தமிழகத்தின் பாரம்பரிய அடையாளத்தையும் பிரதிபலிக்கும் இந்த வளாகம், சென்னையின் புதிய அடையாளமாக உருவெடுக்கும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த திட்டம்: அமைச்சர் அருண்ராஜை நேரில் சந்தித்த ஆஸ்திரேலிய தூதர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share