பாக்., நெட்வொர்க் தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி? தஞ்சாவூர், கோவையில் 7 பேர் கைது! NIA விசாரணையில் திடுக் தகவல்கள்!
தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களும் கர்நாடகாவில் பிடிபட்டவர்களும் ஒரே நெட்வொர்க்குடன் தொடர்புடையவர்களா, அவர்களின் திட்டம் எவ்வளவு தூரம் முன்னேறியிருந்தது என்பது குறித்து NIA அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிரப்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத நெட்வொர்க்குடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் கூலி வேலை செய்து வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்சூத் அலி, 21, என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரின் உதவியுடன் உத்தரப் பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் பயங்கரவாத செயல்களுக்கான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூரில் தங்கி இருந்த யாசர் அப்துல், 44, உமர் முக்தர், 40, ஜாகீர் உசேன், 38, அப்துல், 43, ஷேக் பரீத், 35, சம்சுதீன், 44 ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் புத்தகங்கள், செல்போன்கள், பென் டிரைவ்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் கலந்து கொண்ட ஆவின் ஆய்வக திறப்பு விழாவில் எழுத்துப்பிழை!! பலகையை பார்த்து அதிர்ந்த மக்கள்!
இதே விவகாரத்தில் கர்நாடகாவிலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாசாத் பட்டி என்பவர் உருவாக்கியதாக கூறப்படும் நெட்வொர்க்குடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பாடகர் போல வீடியோக்களை வெளியிட்டு, சிலரை தங்கள் வலையில் சிக்க வைத்து மூளைச்சலவை செய்ததாகவும் விசாரணை அமைப்புகள் கூறுகின்றன.
மேலும், இந்த நெட்வொர்க்குக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவு வழங்கியதாகவும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சதி நடவடிக்கைகளுக்கு ஆட்களை பயன்படுத்த முயன்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கூற்றுகள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் 14 மாநிலங்களில் சதி திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், இதுதொடர்பாக நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வழிபாட்டுத் தலங்களை குறிவைப்பது உள்ளிட்ட பல்வேறு சதித் திட்டங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களும் கர்நாடகாவில் பிடிபட்டவர்களும் ஒரே நெட்வொர்க்குடன் தொடர்புடையவர்களா, அவர்களின் திட்டம் எவ்வளவு தூரம் முன்னேறியிருந்தது என்பது குறித்து NIA அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பயங்கரவாத அமைப்புகளால் மூளைச்சலனை செய்யப்படுவதைத் தடுக்க, அனைத்து மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நிதி நெருக்கடியில் மின் வாரியம்!! ரூ.1.86 லட்சம் கோடி மெகா திட்டம்! தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த தாமதம்?