×
 

நிபா வைரஸ் அச்சுறுத்தல்: தமிழகத்தில் தீவிரக் கண்காணிப்பு - பொது சுகாதாரத்துறை உத்தரவு!

மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்கவும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அரசு விடுத்த அதிதீவிர எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழகப் பொதுச் சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

நிபா வைரஸ் பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்:

நிபா வைரஸ் என்பது வௌவால்கள், பன்றிகள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு வகை தொற்று நோயாகும். பாதிக்கப்பட்ட வௌவால்கள் கடித்த பழங்களை உண்பது, தொற்று உள்ள விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது அல்லது பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது முறையான பாதுகாப்பு கவசங்களை அணியாமல் இருப்பது போன்றவற்றால் இது பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூச்சுத் திணறல் மற்றும் மூளை வீக்கம் (Encephalitis) போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 40% முதல் 75% வரை உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 19 வருஷத்துக்கு அப்புறம் வந்த நிபா வைரஸ்; 2 பேர் கவலைக்கிடம்.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

தமிழக அரசின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்:

காய்ச்சல் மற்றும் மனநிலையில் மாற்றம் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளை, குறிப்பாக மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சந்தேகத்திற்குரிய நோயாளிகளைத் தனிமைப்படுத்திச் சிகிச்சை அளிக்கவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் PPE கவச உடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வௌவால்கள் கடித்த அல்லது கீழே விழுந்த பழங்களை உண்ணக் கூடாது, கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிபா வைரஸிற்கு எனத் தனியான தடுப்பூசிகளோ அல்லது நேரடி மருந்துகளோ இல்லை என்பதால், முறையான அறிகுறிகளுக்கான சிகிச்சையும் மற்றும் தடுப்பு முறைகளுமே உயிர் காக்க உதவும் எனச் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: இது என்ன கும்பல் ஆட்சியா? உச்சநீதிமன்றத்தில் மமதா பானர்ஜியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய துஷார் மேத்தா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share