காகிதத்தில் தான் நடவடிக்கை இருக்கா? தெரு நாய் பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
தெரு நாய்கள் பிரச்னையில் அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் நேரில் தெரியவில்லை என்றும், உயர் நீதிமன்ற வளாகத்திலேயே நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கடுமையான அதிருப்தியைத் தெரிவிடைத்துள்ளது. தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், வெறிநாய் கடி சம்பவங்களைத் தடுக்கவும் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் நடைபெற்ற இந்த விசாரணையின் போது, அரசுத் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்த கருத்துக்கள். தெரு நாய்கள் பிரச்னையில் அரசு எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என அரசு தாக்கல் செய்யும் அறிக்கையில் மட்டுமே வேண்டுமானால் அவை இருக்கலாம்;
இதையும் படிங்க: எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!
ஆனால், கள நிலவரத்தில் நேரில் பார்த்தால் எதுவும் மாறியதாகத் தெரியவில்லை. மாநிலத்தின் மிக முக்கியமான இடமான சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே தெரு நாய்களின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
நாய்கள் தொல்லையால் பொதுமக்களும், குறிப்பாகச் சிறுவர்களும் முதியவர்களும் தினமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் தெரு நாய்கள் கடித்துச் சிறுவர்கள் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வின் இந்த அதிரடிக் கருத்து அரசு நிர்வாகத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரூர் அரசு வேலை விவகாரம்... மீண்டும் ஹை கோர்ட்டில் எதிர்ப்பு மனு..! விஜய் அரசுக்கு சவால்..!!