வதந்திகளை நம்பாதீர்! ஐயப்ப பக்தர்கள் விவகாரத்தை மொழி பிரச்சினையாக மாற்ற வேண்டாம் - காவல்துறை வேண்டுகோள்!
தேனி விபத்தை மொழிப் பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கும் சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம் தென் மண்டல ஐஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கர்நாடக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அது வெறும் வாகன விபத்து மட்டுமே என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மொழி புரியாததால் ஏற்பட்ட சிறு குழப்பத்தைத் தவறாகச் சித்தரிக்க வேண்டாம் என ஐஜி விஜயேந்திர பிதாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
சபரிமலை யாத்திரை முடிந்து தமிழ்நாடு வழியாகக் கர்நாடகா திரும்பிக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல், இரு மாநில எல்லைப் பகுதிகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. கர்நாடக மாநிலக் கொடியை வாகனத்தில் கட்டியிருந்ததற்காக இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிதாரி இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து உண்மையை உடைத்தார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து ஐஜி விளக்குகையில், "சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் மிகைப்படுத்தப்பட்டவை. உண்மையில் அங்கு நடந்தது ஒரு சிறிய வாகன விபத்து மட்டுமே. கர்நாடக ஐயப்ப பக்தர்கள் பயணித்த வாகனத்தின் பின்னால் ஒரு லாரி மோதியுள்ளது. லாரி ஓட்டுநரின் தவறே இந்த விபத்துக்குக் காரணம். இதில் வாகனங்களுக்குப் பெரிய அளவில் சேதமில்லை. கர்நாடக பக்தர்கள் இது குறித்துப் புகார் அளிக்காத நிலையிலும், காவல்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து தேனியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிபா வைரஸ் அச்சுறுத்தல்: தமிழகத்தில் தீவிரக் கண்காணிப்பு - பொது சுகாதாரத்துறை உத்தரவு!
கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா இந்த விவகாரம் குறித்துக் கவலை தெரிவித்திருந்த சூழலில், இரு மாநிலக் காவல்துறையினரும் இது குறித்துத் தொடர்பில் உள்ளனர். மொழி தெரியாத காரணத்தால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சிறு விவாதமே, சமூக வலைதளங்களில் மாநிலங்களுக்கு இடையிலான இனப் பிரச்சினையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. "ஒரு தனிப்பட்ட விபத்தைச் சர்வதேச அளவில் மொழிப் பிரச்சினையாக மாற்ற முயற்சி செய்யக் கூடாது. தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என்று ஐஜி விஜயேந்திர பிதாரி எச்சரித்தார்.
இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பைத் தமிழ்நாடு காவல்துறை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விடுபட்டவர்கள் கவனத்திற்கு! உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? இன்றே கடைசி வாய்ப்பு..