×
 

எந்த ஆட்சி வந்தாலும் பெரியாரை தாண்ட முடியாது! நெல்லை திராவிடர் கழக மாநாட்டில் கி. வீரமணி அதிரடி!

எந்த ஆட்சி வந்தாலும் பெரியாரைத் தாண்டி நடத்த முடியாது என நெல்லையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் 80வது மாநாட்டில் கி. வீரமணி பேசியுள்ளார்.

தமிழகத்தில் எந்தவொரு புதிய ஆட்சி அமைந்தாலும் தந்தை பெரியாரின் கொள்கைகளையும் சமூகநீதிக் கோட்பாடுகளையும் கடந்து எவராலும் ஆட்சி நடத்த முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி திட்டவட்டமாக முழங்கியுள்ளார்.

நெல்லை வாகையடி முனை பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் 'எதிர்நீச்சலில் வென்ற பெரியார்' என்ற தலைப்பில் 80-வது மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இயக்கத்தின் வரலாற்றுத் தியாகங்கள் மற்றும் கொள்கை வலிமை குறித்து விரிவாகப் பேசினார். 

எங்கள் இயக்கத்தில் இருப்பவர்கள் பதவிகளை நாடிச் சென்றதில்லை; மக்கள் மத்தியில் நற்பெயரையும் புகழையும் மட்டுமே சம்பாதித்து வைத்துள்ளார்கள். மறைந்த முதல்வர் கலைஞர் அழகாகக் கூறுவது போல, 'மாண்புமிகு' என்ற பதவி ஒருபோதும் நிரந்தரமல்ல, சுயமரியாதையும் 'மானமும்' மட்டும்தான் நிரந்தரம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

எத்தனை அரசியல் தடைகளும் நெருக்கடிகளும் வந்தாலும் சமரசமின்றித் தடைகளைத் தகர்த்து முன்னேறும் தனித்துவமான பேரியக்கம் திராவிடர் கழகம் என்று சுட்டிக்காட்டிய அவர், இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது போராட்ட வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். 

துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஒருபோதும் அஞ்சக்கூடாது என்பதே தந்தை பெரியார் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் என்றும், கொள்கையாளர்களுக்கு வயது ஒரு தடையல்ல, சமூக மாற்றத்திற்கான உணர்வுகள்தான் முக்கியம் என்றும் தெரிவித்தார். நம்மால் முடியாத காரியம் இந்த உலகத்தில் வேறு யாராலும் முடியாது என்ற துணிச்சலோடு செயல்படுவதுதான் பெரியாரியம் என அவர் விளக்கமளித்தார்.

மேலும், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அண்மைக்காலமாக ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிப்பதாகக் கவலை தெரிவித்த கி. வீரமணி, சமூகத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளை வேரறுக்கத் தீவிரமான களப்பணியும் விழிப்புணர்வும் அவசியம் என வலியுறுத்தினார். 

தவறான வாதங்களை முன்வைப்பதை விடுத்து, சமத்துவக் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதே திராவிட இயக்கத்தின் தலையாய பணி என்றும், தமிழக அரசியல் களத்தில் எந்த ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் பெரியாரை ஒதுக்கிவிட்டு ஓர் அங்குலம் கூட நகர முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு பிரசாரத்திற்கு தடை ஏன்? தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share