அடுத்த தேர்தலுக்காக அல்ல, அடுத்த தலைமுறைக்காகவே இந்த ஆட்சி! அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேச உரை!
சென்னையில் நடைபெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் கல்வித்துறை இலக்குகள் குறித்து ஆவேசமாகப் பேசினார்.
திராவிட மாடல் அரசு என்பது அடுத்த தேர்தலை மனதில் வைத்துப் பணியாற்றும் அரசு அல்ல அது அடுத்த தலைமுறையின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இயங்கும் அரசு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அதிரடியாகத் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைநிலைப்பயிற்சி தொடக்கவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் தமிழகம் நிலப்பரப்பில் 4% மற்றும் மக்கள் தொகையில் 6% மட்டுமே இருந்தாலும், இன்று 11.19% பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளோம். இந்த அசுர வளர்ச்சிக்கு முதல்வர் எடுக்கும் முயற்சிகளே காரணம்; தமிழகம் இன்று 'சூப்பர் ஸ்டேட்' ஆக உருவெடுத்துள்ளது. காலை உணவுத் திட்டம் முதல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது வரை அனைத்தையும் இந்த அரசு செய்து வருகிறது. 'எல்லோருக்கும் கல்வி' என்ற நிலையிலிருந்து மாறி, 'அனைவருக்கும் தரமான நவீன கல்வி' வழங்குவதே எங்களது முதன்மை நோக்கம்.
அரசு ஆசிரியர்கள் அனைவரும் நம்முடைய மாநிலக் கல்விக் கொள்கை மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 2025-ஆம் ஆண்டுக்கான அடிப்படை நிர்வாகப் பயிற்சி மற்றும் கற்றல் முறைகள் உள்ளிட்ட 9 பிரிவுகளில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: திமுக 2026 தேர்தல் அறிக்கை கூட்டம்: திருச்சியை இரண்டாம் தலைநகராக்க அமைச்சர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் 65 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். அந்தப் பிள்ளைகளைத் தங்கள் பிள்ளைகளாகப் பாவித்து ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். மாணவர்கள் தயக்கமில்லாமல் கேள்வி கேட்கும் சூழலை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 1% உயர்ந்து வருகிறது. இது ஆசிரியர்களின் கடின உழைப்பிற்குச் சான்றாகும்.
1996-ஆம் ஆண்டிலேயே ஐ.டி. பாலிசியைக் கொண்டு வந்த கலைஞரின் வழியில், இன்றைய அரசும் நவீனத் தொழில்நுட்பங்களை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்கிறது. 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற அரசின் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்லும் மிகப்பெரிய தூதுவர்கள் ஆசிரியர்களே என்று அமைச்சர் தனது உரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஆகம விதிகளை மீறக்கூடாது....! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!