×
 

ஆகம விதிகளை மீறக்கூடாது....! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் புனரமைப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மைப் பணிகள் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று மிக முக்கியமான கருத்துக்களையும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் புனரமைப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மைப் பணிகள் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. முறையான அனுமதி இன்றியும், ஆகம விதிகளை மீறியும் புனரமைப்புப் பணிகள் நடப்பதாக விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் வாரிசு கிருஷ்ண தேவ ராயா தொடர்ந்த வழக்கை நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி இன்று விசாரித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோவிலில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து நீதிமன்றம் தனது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது.

பக்தர்களின் வசதி மற்றும் கூட்ட மேலாண்மையை விட, கோவிலின் தொன்மையான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும். புனரமைப்புப் பணிகளின் போது பழங்கால கல்வெட்டுகள், சுவரோவியங்கள் அல்லது சின்னங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்குத் தமிழக அரசும் கோவில் நிர்வாகமுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். கோவில் ஆகம விதிகளை மீறிச் சாய்தளங்கள் (Ramps) மற்றும் நடை மேம்பாலங்கள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். பழங்கால கிரானைட் கற்களை அகற்றிவிட்டு நவீனப் பொருட்களைப் பயன்படுத்துவது கோவிலின் தொன்மையைச் சிதைத்துவிடும். கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் கட்டுமானங்களை மாற்றுவதற்குப் பதிலாக, திருப்பதியில் உள்ளதைப் போல டோக்கன் முறை அல்லது நேர ஒதுக்கீடு முறையைப் பின்பற்றலாம்.

இதையும் படிங்க: ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆயிரக்கணக்கானோர் அமர்ந்தாலும் கடற்கரையில் இருப்பது போன்ற காற்றோட்டத்தை உணரக்கூடிய பிரம்மாண்டமான இந்தக் கோவிலில், கூட்ட மேலாண்மை என்பது ஒரு பெரிய சிக்கலாக இருக்க முடியாது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். தொன்மைச் சின்னங்களைப் பாதுகாப்பதில் சமரசம் செய்துகொள்ள முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ள நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளைக்கு (பிப்ரவரி 19) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: “விதி திரைப்பட சுஜாதாவே எனக்கு உந்துதல்!” - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா நெகிழ்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share