×
 
☰

சட்ட நடவடிக்கையா.? திட்டமிட்ட பழிவாங்கலா.? கார்த்திகா கைது..! வேல்முருகன் எதிர்ப்பு..!!

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்தார்.

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை கோவையில் இன்று காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை வழக்கமான சட்ட நடவடிக்கையா அல்லது தேர்தல் கால அரசியல் மோதலின் தொடர்ச்சியான பழிவாங்கலா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகாவை கோவையில் வைத்து தாராபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் அவரது கட்சியினருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாகவும், அவற்றுக்கு எதிராக போராடியதாகவும் அன்றைய நிகழ்வுகள் தெரிவிக்கின்றன என வேல்முருகன் குறிப்பிட்டார். அக்டோபர் 2 அன்று தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிமனை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில் கட்சியினர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு அடுத்த நாள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டி கார்த்திகா தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அக்டோபர் 4 அன்று முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ளவிருந்த பகுதியில் கார்த்திகாவும் கட்சியினரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்ய காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து அவரோடு மேலும் ஐவருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. ஒரு வேட்பாளர் தனது தொகுதியில் மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு கேட்பதற்கான வாய்ப்பை முழுமையாகப் பெற வேண்டும். ஆனால் தங்கை கார்த்திகாவின் பிரச்சாரத்திற்கு தொடர்ந்து தடைகள் ஏற்பட்டதாகவும், அந்தத் தடைகள் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்களது தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என வேல்முருகன் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: #BREAKING: தாராபுரத்தில் பதற்றம்..! நாதக கார்த்திகாவிடம் விசாரணை..! காவல் நிலையத்தில் குவியும் நாதகவினர்..!

வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு தடைகள் ஏற்பட்டதாக புகார் அளிக்கும்போது உரிய விசாரணை நடத்த வேண்டிய தேர்தல் நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததா? அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான தேர்தல் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் வெளிப்படையான பதிலை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பொதுவாக தேர்தல் காலங்களில் வழக்குகள் பதியப்பட்டால் முறையாக நீதிமன்றத்தின் மூலம் வழக்கு பதியப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுப்பது வழக்கம். அதுபோல இந்த கைதில் எதுவும் நடந்திருக்கிறதா என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சட்டப்படி விசாரணை நடத்துவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் சட்டம் அனைவருக்கும் சமமாகவும் பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும். அரசியல் எதிர்ப்புக் குரலை ஒடுக்குவதற்கான கருவியாக காவல்துறை அல்லது தேர்தல் நிர்வாகம் பயன்படுத்தப்படக்கூடாது என வேல்முருகன் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவின் கைது நடவடிக்கையைக் கண்டிப்பதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: நாதகவினர் கைது..! அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்..!! TTV தினகரன் விளாசல்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share