பிஞ்சு குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை..! கதறல் சத்தம் நெஞ்சை கிழிக்குது..!! சீமான் கண்டனம்
பிஞ்சு குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம் நிகழ்வதாக சீமான் கண்டனம் தெரிவித்தார்.
குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியும், ஊத்தங்கரையில் 60 வயது மூதாட்டியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது மனிதப் பேரவலத்தின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில்
60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள கொடுஞ்செய்தி நெஞ்சை உலுக்குகிறது என்றார். திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் உலக மகளிர் நாளில் நிகழ்ந்துள்ள இக்கொடுமைகள் வன்மையான கண்டனதுக்குரியது என்று தெரிவித்தார். குமாரபாளையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், திமுக அரசு சிறுமியின் நிலை குறித்து வெளியே தெரியாமல் மூடி மறைக்க முயல்வது வெட்கக்கேடானது என்றும் திமுக அரசு குற்றத்தை மறைப்பதில் காட்டும் ஆர்வத்தையும், அக்கறையையும் தடுப்பதில் காட்டியிருந்தால் சட்டம் ஒழுங்கு என்றைக்கோ சீரடைந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
ஏதும் அறியாத சிறுமிக்கு நிகழ்ந்துள்ள இக்கொடுமை அரசும், ஒட்டுமொத்த சமூகமும் வெட்கித்தலைகுனிய வேண்டிய மிகப்பெரிய மனிதப்பேரவலம் என கூறிய சீமான், பெற்ற குழந்தைக்கு நேர்ந்த பெருங்கொடுமையைச் சொல்லி அழும் பெற்றோரின் கதறல் ஒலி நெஞ்சைப் பிளக்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேரளா அத்துமீறலை கண்டுகொள்ளாத திமுக... சீமான் கடும் எச்சரிக்கை.!!
யார் இப்பேரவலத்திற்குப் பொறுப்பேற்பது? திமுக அரசு பொறுப்பேற்குமா? திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பொறுப்பேற்பார்களா என கேட்டார். அதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியரில், 70 வயது கணவரை கொன்று அவரது மனைவியான 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள துயர நிகழ்வு மற்றுமொரு கொடுமை என்றும் திமுக ஆட்சியில் 80 வயது மூதாட்டி முதல் பச்சிளம் குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்கள் நாளும் நடக்கின்றன என்றும் சீமான் கூறினார்.
இதையும் படிங்க: இன்னும் எத்தன உயிர பலிவாங்க போகுதோ திமுக..! நாங்குநேரி கொடூரத்திற்கு சீமான் கண்டனம்..!